12 ஆவது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்களின் போராட்டம்
சென்னை மாநகராட்சி தூய்மை பணிகளை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்ததை கண்டித்தும் பணி நிரந்தரம் கேட்டும் ரிப்பன் பில்டிங் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். ராயபுரம், திரு வி.க நகர் ஆகிய இரு மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தொடங்கிய போராட்டம் இன்று 12 ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. இதனால் சென்னை மாநகராட்சி 5 மற்றும் 6 ஆவது மண்டலங்களில் குப்பைகள் அகற்றப்பட்டமல் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள்.
தூய்மை பணியாளர்களுடன் இதுவரை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற ஏழு கட்ட பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படவில்லை. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா , பாடகி சின்மயி உள்ளிட்ட அரசியல் மற்றும் திரைத்துறை பிரமுகர்கள் தூய்மை பணியாளர்களின் போராட்ட களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இப்படியான நிலையில் சென்னை மேயர் பிரியா ராஜன் பேட்டி ஒன்றில் பேசிய கருத்திற்கு திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கொடுத்த ரியாக்ஷன் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஒன்னா டீ குடிச்சா சமூக நீதியா
மேயர் பிரியா ராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியபோது "தேர்தல் வரவிருப்பதால் மற்ற கட்சிகள் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தேர்தல் வந்தாலும் வராவிட்டாலும் தூய்மை பணியாளர்களோடு இருப்பவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் . மேலும் மாநகராட்சி மட்டுமல்லாமல் அரசு தூய்மை பணியாளர்கள், தனியார் தூய்மை பணியாளர்களின் நலன் கருதி திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். அவர்களுடன் சேர்ந்து டீ குடித்தார்." என மேயர் பிரியா ராஜன் தெரிவித்திருந்தார். தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு தொடர்ச்சியாக தனது ஆதரவைத் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார் இயக்குநர் மோகன் ஜி. மேயர் பிரியாவின் கருத்திற்கு மோகன் ஜி ' ஒன்னா டீ குடிப்பது அவ்வளவு பெரிய சமூக நீதியா?" என பதிவிட்டுள்ளார். மேலும் போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுடன் தானும் கைதாக தயார் என்றும் அவர் கூறியுள்ளார்