நாடக்காதலால் பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு உதவும் வகையில் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள கட்டேரி பகுதியில் காளி - பிரவீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் மகள் திவ்யதர்ஷினி பர்கூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். திவ்யதர்ஷினிக்கு பேருந்து ஏறும் இடத்தில் சந்தித்த ஆட்டோ ஓட்டுநரான பெருமாள் என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சாதி என்றாலும் பெருமாளுக்கு ஏற்கனவே வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி திவ்யதர்ஷினி பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அன்று பெருமாள் மற்றும் திவ்யதர்ஷினி ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஏலகிரி மலையில் உள்ள முருகன் கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அப்போது காவல் நிலையம் அந்த பெற்றோர்கள் திவ்யதர்ஷினியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல சமாதானப்படுத்திக் கொண்டிருந்தபோது போலீஸார் முன்னிலையில் திவ்யதர்சனியின் காலை பிடித்து தாய் தந்தை இருவரும் கத்தி கதறி அழுதனர். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால் திவ்யதர்ஷினி தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையம் முன்பு உள்ள சாலையில் திடீரென உருண்டு புரண்டு கத்தி கதறி அழுதனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இயக்குநர் மோகன் ஜி கோரிக்கை
இந்த நிலையில் இயக்குநர் மோகன் ஜி சமூக வலைத்தளத்தில் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், “தமிழகம் முழுக்க நாடக காதலால் பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு சட்டரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் உடன் நிற்பதற்கும், உதவுவதற்கு ஒரு அமைப்பு தேவை என பலர் என்னுடன் தொலைபேசியில் கோரிக்கை வைக்கிறார்கள்.. எதிர் தரப்பில் குறைந்தது 20 வழக்கறிஞர்கள், கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள் உடனடியாக ஒன்று கூடுகிறார்கள் எனவும் அவர்களை எதிர்த்து இந்த அமைப்பு களத்தில் நிற்க வேண்டும் எனவும் சொல்கிறார்கள்.
இதற்கு என்ன வழி.. இந்த பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு வழிகாட்ட வழக்கறிஞர்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்க முடியாதா.. இல்லை எதாவது ஒரு அமைப்பு தயார் என்றால் ஒரு செய்தியாளர் சந்திப்பு வைத்து உங்களை மக்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.. பாவப்பட்ட இந்த பெற்றோர்களுக்கு வழி காட்டுங்கள்” என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மோகன் ஜி சினிமாவில் திரௌபதி என்ற படத்தை இயக்கியிருந்தார். அதேசமயம் ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய படங்கள் மூலம் சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் காட்சிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
