இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரௌபதி 2 படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திரௌபதி2 திரைப்படம் நமது மண்ணின் வரலாறு.. வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டதை இந்தத் தலைமுறை அறியும் வகையில் திரையில் பதிவு செய்துள்ளோம். இந்தப் பொங்கல் நாளில் மூன்றாவது வீர வல்லாள மகாராஜாவும் வீர சிம்ம காடவராயரும் வெள்ளித்திரையில் ஒன்றாக வருகிறார்கள். நாளை, சனிக்கிழமை மாலை, டிரெய்லர் வெளியிடப்படுகிறது. ஆட்டம் ஆரம்பம்” என தெரிவித்துள்ளார்.
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் மோகன் ஜி. இவர் 2020ம் ஆண்டு திரௌபதி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் பிரபலமானார். நாடக காதல் என்ற ஒரு விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு அவர் இயக்கிய அந்த படம் பெரும் சர்ச்சைகளை சந்தித்தது. அந்த படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்திருந்தார். ஹீரோயினாக ஷீலா ராஜ்குமார் நடித்திருந்தார். இந்த படத்துக்கு ஜூபின் இசையமைத்திருந்தார்.
இதனிடையே நீண்ட நாட்களாக திரௌபதி படத்தின் 2ம் பாகத்தை எடுக்க மோகன் ஜி முயற்சி செய்தார். அதன்படி அறிவிப்பும் வெளியானது. இந்த படம் 14ம் நூற்றாண்டில் மறைக்கப்பட்ட போசாளர்களின் செந்நீர் சரிதம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தர்மம் காக்க உயிரை துச்சமென துறந்த மாவீரர்களின் மறைக்கப்பட்ட வீர தீர ரத்த சரித்திரம் என சொல்லப்பட்டிருந்தது. இதில் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் ஹீரோயினாக இப்படத்தில் ஹீரோயினாக ரக்சனா இந்துசூடன் திரௌபதி தேவி ஆக நடித்துள்ளார். இந்த படமும் ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக இப்படத்தில் பாடல் ஒன்றை பாடிய சின்மயி தான் அப்பாடலின் நோக்கம் தெரிந்திருந்தால் பாடியிருக்க மாட்டேன் என தெரிவித்தார். இதற்கு இயக்குநர்கள் மோகன் ஜி, பேரரசு போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் படத்தில் அந்த பாடல் இடம் பெறாது என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த படம் நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தோடு நேருக்கு நேர் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொங்கல் ரிலீசில் இருந்து ஜனநாயகன் வெளியேறிய நிலையில் பராசக்தியும் ரிலீசாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படியான நிலையில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பொங்கல் பண்டிகைக்கு திரௌபதி 2 படத்தை வெளியீடுவதாக மோகன் ஜி கூறியுள்ளார்.