பெரியாரை திட்டுவதாலேயே ஒருவர் பெரிய சிந்தனையாளர் ஆக முடியாது என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். 

Continues below advertisement

சென்னையில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் விருது வழங்கும் விழாவில் பெரியார் விருது நடப்பாண்டு இயக்குநர் மாரி செல்வராஜூக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்த விருதை அவர் எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் இணைந்து பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “ இந்த விருதை பெறுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். என்னை மாதிரி கிராமத்தில் இருந்து சாதிய இறுக்கம் நிறைந்த ஊரில் இருந்து சினிமா, எழுத்தை நோக்கி பயணிக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியவை எழுத்தாளர் பெருமாள் முருகனின் எழுத்துக்கள். அதுதான் என்னுடைய சினிமாக்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

1990ம் ஆண்டு காலக்கட்டங்களில் தென் தமிழ்நாடான நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பற்றியெரிந்த காலத்தில் வளர்ந்த பையன் நான். எங்கள் வீட்டில் என்னுடைய சித்தப்பா கம்யூனிச சித்தாந்தத்தை கொண்டிருந்தார். அப்போது எனக்கு அம்பேத்கர், பெரியார் ஆகியோர் பரீட்சையமான முகங்கள். அம்பேத்கர் இயல்பாகவே வாழ்வோடு ஒன்றிப் போயிருந்தார். அதேசமயம் பெரியார் எனக்கு தொலைதூர குரலாகவே இருந்தார். 

Continues below advertisement

சட்டக் கல்லூரியில் படிக்கும்போது பெரியாரை தெரிந்துக் கொள்ளும் சூழல் அமையவில்லை. ஆனால் எனக்குள் பெரியாரை கொண்டு சேர்த்தது என்னுடைய மனைவி தான். நான் இப்போது பெரியாரை பற்றி படித்து விட்டு ஏதாவது பேசுகிறேன் என வைத்துக் கொண்டால், இன்னும் 10 ஆண்டுகள் கழித்து மிகச்சிறப்பாக பேசுவேன். பெரியாரை எதிர்த்தே நான் பிரபலமாக முடியும். 

நன்றாக பேச கத்துக்க முடியும். மிகப்பெரிய தெம்பு வந்து விடும். என்னுடைய பேச்சுக்கு பாராட்டு கிடைத்து விடும். அந்த தெம்பும், திராணியும் என்ன செய்யும் என கேட்டால், நாம் யாரிடம் இருந்து கற்றுக் கொண்டோமோ, அவர்களைப் பற்றி பேசும்போது தான் நாம் பெரிய ஆளாக முடியும். ஆசானை மீற வேண்டும் என்பது, அவர்களை குறை சொல்ல வேண்டும் என்பதல்ல. ஆசான் உங்களைப் பாராட்ட வேண்டும். 

பெரியாரை திட்டுவதாலேயே ஒருவர் பெரிய சிந்தனையாளர் ஆகி விட முடியாது. அவரை புரிந்து கொண்டு அவர் எந்த மாதிரியாக சமூகம், கருத்து சுதந்திரத்தை விதைக்க ஆசைப்பட்டாரோ அதை செய்ய வேண்டும். நாம் எதை மக்களிடம் கொடுக்கிறோம் என்பது முக்கியம். வன்மம், பிரிவினை, வெறுப்புணர்வை கொடுப்பது சாதனை கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாரி செல்வராஜ் பேச்சு சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மறைமுகமாக விமர்சித்துள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.