வாழை


மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாழை படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது. இப்பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர்  ராம் , பா ரஞ்சித் , சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் தானு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலையரசன் , நிகிலா விமல் , ஜே சதிஷ் குமார் , திவ்யா துரைசாமி , ஜானகி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்கள். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ரெட் ஜயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வாழை முதல் பாடல் வெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது கீழ்வருமாறு


பல கேள்விகளோடு பைத்தியம் பிடித்து அலைந்திருக்கிறேன்


ராம் சார் சொன்னதுபோல் இந்த மேடைதான் என்னுடைய முதல் மேடை. பரியேறும் பெருமாள் படத்தை நீங்கள்  கொண்டாடிய விதம் எனக்கு தெரியும் . என்னுடைய கலையை,  என்னுடைய அரசியலை நீங்கள் கொண்டாடிய விதம் எனக்கு தெரியும் , அந்த நம்பிக்கைதான் கர்ணன் மாமன்னன் , பைசன் மாதிரியான கதைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையை எனக்கு கொடுத்தது.


சினிமாவுக்கு வந்ததும் நான் எடுக்க வேண்டும் என்று நினைத்த படம் வாழை. ஒரு 50 லட்சம் ரூபாயில் இந்த படத்தை எடுத்து முடித்துவிடலாம் என்று நினைத்தேன். இதை எடுத்தால் தான் என்னுடைய அடுத்த கதைக்கு என்னால் போக முடியும் என்று நான் நம்பிக் கொண்டு இருந்தேன். அந்த அளவிற்கு எனக்குள் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கதை இது. அதற்கு பிறகு நிறைய வாசிக்கத் தொடங்கியபோது தான் இந்தப் படத்தை கஷ்டப் பட்டு எடுக்கக் கூடாது இதை நல்லா எடுக்கனும் என்று தள்ளி வைத்து பரியேறும் பெருமாள் எடுத்தேன். என்னுடைய அடுத்தடுத்த படங்களும்  வெளியாகின. ஆனால் வாழை கதையை என்ன செய்வது என்று என் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது. 


 இந்தப் பாடலை இவ்வளவு பெரிய நிகழ்வாக வைத்து வெளியிடுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது . இந்தப் படத்தில் நடித்த பொன் வேலுவும் ராகுலும் இந்தப் படம் எடுக்கும் போது சின்ன பசங்களாக இருந்தார்கள். பைசன் படம் எடுக்கும் போது அவர்கள் இருவரும் என்னை பார்த்தது நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று கேட்டது போல் இருந்தது. அவர்களுக்காக தான் இந்தப் படத்தை வெளியிடுகிறேன். இந்த படத்தை வெளியிடுவதற்கு எனக்கு உதவிகரமாக இருந்த ஹாட்ஸ்டாருக்கு நன்றி


நான் நிறைய இடங்களில் பேசும்போது பதற்றமாகி நிறைய பேசிவிடுவேன். ரஞ்சித் அண்ணன் அடிக்கடி உனக்கு ஏன் இவ்வளவு பதற்றம் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார். அதற்கு ஒரே காரனம் என்னவென்றால் என் மனதிற்குள் நிறைய விஷயம் ஓடிக் கொண்டே இருக்கும். ஒரு கதையை படமாக்குவது என்றால் அந்த கதையை ரசித்து அந்த வடிவத்தை யோசித்து பண்ணலாம். ஆனால் என் வாழ்க்கையை நானே இயக்குவது என்பது இந்த பதற்றம் இருந்துகொண்டே இருக்கிறது. நான் உருவாக்கிய நிறைய கதாபாத்திரங்கள் என்னைச் சுற்றி இருந்து கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன பேசுகிறேன். நான் எந்த மாதிரியா ஒரு மனிதனாக மாறிக் கொண்டிருக்கிறேன் என்பதை என்னை கவனித்துக் கொண்டே இருப்பதால் எனக்கு இந்த பதற்றம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்த நிகழ்வு எனக்கு ரொம்பவும் சந்தோஷமான ஒரு நிகழ்வாக இருப்பதற்கு காரணம் இந்த மேடையில் இருக்கும் ராகுல் மற்றும் பொன் வேலு ஆகிய இருவரும் இந்த மேடையில் இருப்பது தான். இருவரும் என்னுடைய சொந்த அக்கா மகன்கள் தான் . நான் இருந்த அதே வயதில் தான் இருவரும் இருக்கிறார்கள். இனிமேல் இவர்கள் வழிதவறி போய்விட மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். இந்த கலையை வைத்து இவர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களை இன்னும் சிறப்பாக புரிந்துகொள்வார்கள். என் ஊருக்குள் கலை வந்தது தான் எனக்கு பெரிய மகிழ்ச்சி. இவர்களை பார்த்து ஊரில் இருக்கும் மற்ற பசங்களும் எப்படி மாறுவார்கள் என்பது எனக்கு தெரியும் . இந்த வயதில் நான் எவ்வளவு மூர்க்கமாக இருந்தேன் என்று எனக்கு தெரியும் . என் மனதில் தோன்றும் எல்லாவற்றையும் யோசித்து பைத்தியம் பிடித்த மாதிரி நான் இஅவர்கள் வயதில் அலைந்திருக்கிறேன். அதிலிருந்து முட்டி மோதி நான் வெளியே வந்து இவர்களை இந்த மேடையில் உட்கார வைத்துவிட்டேன் என்பதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி. 


மாரி செல்வராஜ் மீது நிறைய சந்தேகங்கள் நிறைய விமர்சனங்கள் இருக்கலாம் . வாழைத் திரைப்படம் என்னை நம்புபவர்களுக்கு இன்னும் நன்றாக புரிந்துகொள்ளவும் என்னை சந்தேகிப்பவர்களுக்கு என் பக்கம் தங்கள் பார்வையை திருப்பவும் உதவியாக இருக்கும் .