தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு வருவதாக இயக்குநர் மாரி செல்வராஜ் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்தது. இதனால் ஏரி, குளம், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிந்தது. பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, மணிமுத்தாறு, காரையாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
மேலும் ஏரிகள், குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் நெல்லை, தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். எங்கு பார்த்தாலும் வெள்ளம் தான் என்கிற நிலையில் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். மேலும் சாலைகளும் துண்டிக்கப்பட்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தண்டவாளங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கும் நிலையில் உள்ளதால் ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அவருடைய வீடு, அவர் இருக்கும் பகுதியும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து எக்ஸ் வலைத்தளத்தில், “வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை .
வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்” என தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் தெரிவித்த பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அந்த பகுதியை வந்து பார்வையிட்டார். அங்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்வின் போது இயக்குநர் மாரி செல்வராஜ் உடனிருந்தார்.
இந்நிலையில் தற்போது மாரி செல்வராஜ் வெளியிட்ட பதிவில், “கருங்குளம் பஸ் ஸடாப் அருகே இரண்டு நாட்களாக சிக்கியிருந்தவர்கள் மீட்கபட்டுகொண்டிருக்கிறார்கள் … இப்போது வரை பத்து பேர் மீட்கபட்டிருக்கிறார்கள் … எல்லாரும் நிச்சயமாய் மீட்கபடுவார்கள் .உறவினர்கள் அச்சபடவேண்டாம்” என தெரிவித்துள்ளார். வேடிக்கை பார்க்காமல் மக்களை காப்பதில் தீவிரம் காட்டிய மாரி செல்வராஜூக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.