துருவ் விக்ரம் நடித்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பைசன் திரைப்பட நாளை அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தன்னுடைய அடுத்த படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறார் மாரி செல்வராஜ். அந்த வகையில் ரஜினியின் படத்தை இயக்குவது குறித்தும் அவர் பேசியுள்ளார்

Continues below advertisement

ரஜினியுடன் படம் பற்றி மாரி செல்வராஜ் 

" ரஜினி சாரை நிறைய முறை சந்தித்திருக்கிறேன். அவரிடம் சில கதைகளை பேசியிருக்கிறோம். என்னுடைய ஒவ்வொரு படம் வெளியாகும் போது ரஜினி என்னை அழைத்து பேசியிருக்கிறார். பரியேறும் பெருமாள் வெளியானபோது நேரில் அழைத்து பேசினார். கர்னண் , மாமன்னன் படத்தையும் பாராட்டினார். வாழை படத்திற்கு ஒரு பெரிய கடிதமே எழுதி அனுப்பினார். என்னை அவருக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அவரைப் போன்ற ஒரு நடிகை வைத்து நான் எப்படி வேலை செய்வேன் என்கிற சந்தேகம் அவருக்கு இருக்கலாம். ரஜினியுடனான படம் தற்போது பேச்சுவார்த்தை கட்டத்தில் தான் இருக்கிறது. நானும் நிறைய வேலைகளில் இருப்பதால் அதைப் பற்றி யோசிக்கவில்லை. எதுவா இருந்தாலும் அவர் தீர்மானம் எடுக்கனும். என்னிடம் கதை இருக்கிறது. அந்த கதையை அவர் வந்தாலும் செய்யலாம் , துருவ் விக்ரமாக இருந்தாலும் செய்யலாம். நான் எதிர்பார்க்கக் கூடியது எந்த நடிகராக இருந்தாலும் என்னை நம்பனும். என் கதையையும் , அதில் இருக்கக் கூடிய மனிதர்களையும் முழுமையாக நம்பி வந்தார்கள் என்றால் நான் யாருடன் வேண்டுமானால் வேலை பார்க்க ரெடியாக இருக்கிறேன் " என மாரி செல்வராஜ் கூறியுள்ளார்

பைசன் 

வாழை படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் பைசன். துருவ் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். ரஜிஷா விஜயன் , அனுபமா பரமேஸ்வரன் , லால் , பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார்.