இயக்குநர் மாரி செல்வராஜின் பைசன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரனை நாயகியாக நடிக்க வைத்தது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. வெள்ளை நிற நாயகிகளுக்கு ஏன் கருப்பு நிற மேக்கப் போட்டு நடிக்க வைக்க வேண்டும் என கேள்வி பரவலாக எழுப்பப்பட்டது. இதற்கு மாரி செல்வராஜ் அளித்த பதிலில் மாற்றுத் திறனாளிகள் குறித்து அவர் பேசிய கருத்து பரவலாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
மாற்றுதிறனாளிகள் குறித்து மாரி செல்வராஜ் சொன்னது என்ன ?
ரசிகர்களுடனான கலந்துரையாடலின் போது உங்கள் படங்களில் வெள்ளை நிற நாயகிகளுக்கு கருப்பு நிற மேக்கப் போட்டு நடிக்க வைப்பதற்கு பதிலாக கருப்பு நிற நாயகியை நடிக்க வைக்கலாமே என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு மாரி செல்வராஜ் " வெள்ளையான நாயகிகளுக்கு கருப்பு நிற மேக்கப் போட்டு நடிக்க வைப்பது என்பது ஒரு சாய்ஸ் தான். அப்படி பார்த்தால் ஊனமுற்றோரின் கதாபாத்திரத்தில் உண்மையான ஊனமுற்றோரை நடிக்க வைத்து துன்புறுத்த முடியுமா ? நாங்க ஒருத்தர் வெள்ளையாக அழகாக இருக்காங்க என்று நடிக்க வைப்பதில்லை. யாருக்கு அர்பணிப்பு இருக்கோ , யார் கதைக்காக என்ன வேணா செய்ய தயாரா இருக்கிறார்களோ அவர்களை தான் தேர்வு செய்கிறோம்." என மாரி செல்வராஜ் பதில் கூறியிருந்தார். அவரது இந்த பதில் தற்போது பரவலாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது . குறிப்பாக மாற்றுதிறனாளிகள் குறித்து மாரி செல்வராஜ் பேசியது கருத்திற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன
புறக்கணிப்பு தான் கொடுமை நடிக்கவைப்பது இல்லை
மாற்றுத் திறனாளிகளுக்கு பொது சமூகத்தில் அனைத்து துறைகளிலும் பிரதிநிதித்துவம் என்பது அவசியமானது. மாற்றுதிறனாளிகளை நடிக்க வைப்பது கொடுமை இல்லை மாற்றுதிறனாளிகள் என்பதால் அவர்களை ஒதுக்கி வைத்து அவர்களுக்கு வாய்ப்பு தராமல் புறக்கணிப்பதே பெரிய கொடுமை என பலர் மாரி செல்வராஜின் கருத்திற்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
பைசன் படக்குழு
பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து பைசன் படத்தை தயாரித்துள்ளது. துருவ் விக்ரம் , அனுபமா பரமேஸ்வரன் , ரஜிஷா விஜயன் , பசுபதி , அமீர் , லால் , அருவி மதன் , அழகம்பெருமாள் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். பைசன் திரைப்படம் 5 நாட்களில் தமிழில் ரூ 35 கோடி வசூலித்துள்ளது.