தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வரும் மாரி செல்வராஜ், நேர்க்காணல் ஒன்றில் தன் காதல் எப்படி கல்யாணம் வரை சென்றது என்பது குறித்து பேசியுள்ளார். 


இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி 2018ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்தப் படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 2020 ஆம் ஆண்டு தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை எடுத்தார். தொடர்ந்து நடப்பாண்டு உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷை வைத்து ‘மாமன்னன்’ படத்தை இயக்கினார். 


மேற்கு மாவட்ட அரசியலை வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒன்றாக மாறிவிட்டது. அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதனிடையே நேர்காணல் ஒன்றில்  மாரி செல்வராஜ் மற்றும் அவரின் மனைவி திவ்யா இருவரும் தங்கள் காதல், திருமணம் பற்றி பேசியுள்ளார்கள். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


அதில் பேசிய திவ்யா, “மாரி செல்வராஜ் லவ் பண்ணிட்டு இருக்கும்போது நாங்க பேசுறதே ரொம்ப கஷ்டம். ஒரு நாளைக்கு ஒருமுறை பேசுவது என்பதே கஷ்டம். அந்த சமயத்திலும் நான் போன் பண்ணி தொல்லை பண்ணினது இல்லை. அப்பவே எனக்கு பழகிடுச்சு. அதேசமயம் குழந்தைகள் வந்த பின், அவர்கள் மீது அன்பை காட்டும்போது செல்லமா கோபம் வரும். நாங்க சண்டை போடுவோம். ஆனால் காதலிக்கும்போது எப்படி இருந்தாரோ, அப்படித்தான் மாரி செல்வராஜ் இப்பவரைக்கும் இருக்காரு, அந்த அன்பு கொஞ்சம் கூட மாறவில்லை” என தெரிவித்தார். 


தொடர்ந்து அந்த நேர்காணலில் பேசிய மாரி செல்வராஜ், “நான் ஆடு, மாடு மேய்த்து விட்டு கூலி வேலைக்கு சென்றிருக்கிறேன். அவ்வளவு பெரிய துன்பங்களை சந்தித்த என்னை உருவாக்கியதில் பெரும் பங்கு தோழிகளுக்கு தான் உள்ளது. நான் ஒரு இடத்தில் நிற்காமல் நடந்துக் கொண்டிருக்கும் ஆள் என வழியனுப்பி வைத்தார்கள். இப்படியான சூழலில் தான் திவ்யாவை சந்தித்தேன். நான் எப்படி கடல், வானத்தை போல பெண்களை பார்க்கிறேன் என்பதை நம்பிய அவர் என்னை புரிந்து கொண்டார். நாங்க ஏழு வருஷம், ஒரே வீட்டுல ஒன்றாக வாழ்ந்தோம். அந்த லிவிங் டூ கெதர் வாழ்க்கை இப்ப இருக்குற அந்த புரிதலுக்கு காரணம். உண்மையிலேயே எங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கவே தோணலை. 


அதற்கு காரணம், கணவன், மனைவியா வாழ்வதில் நிறைய கமிட்மெண்ட் இருக்கு. ஆனால் ஃப்ரண்ட்ஷிப்ல அதெல்லாம் கிடையாது. கல்யாண உறவில் எல்லாவற்றையும் கடமையாக மாற்றுகிறார்கள். 13 ஆண்டுகளுக்கு முன்னாடியே அவரோட குடும்பம் என் மீது வச்ச நம்பிக்கை மிகப்பெரியது. வீட்டில் சொன்னதால் தான் கல்யாணம் பண்ணிகிட்டோம். இக்கட்டான நேரத்தில் மீட்கும் துணையாகவும், எதிரே பள்ளம் இருந்தால் வழியில் பிடிச்சு நிறுத்தும் கையாகவும் திவ்யா இருந்தார். என் சுக, துக்கங்களுக்கான காரணம் என்னவென்று திவ்யாவுக்கு மட்டுமே தெரியும்” என அந்த நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தம்பதியினருக்கு நவ்வி என்ற மகளும், யுவான் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.