தக் லைஃப் படத்தில் த்ரிஷா
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் முதல் நாள் தொடங்கியே நெகட்டிவ் விமர்சனங்கள் பெற்று வருகிறது. சிம்பு , த்ரிஷா , அபிராமி , ஜோஜூ ஜார்ஜ் , ஐஸ்வர்யா லக்ஷ்மி என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளார்கள். ஆனால் கமல் சிம்பு தவிர்த்து மற்றவர்களின் கதாபாத்திரங்களுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப் படவில்லை என்கிற ஒரு விமர்சனமும் படத்தில் வைக்கப்படுகிறது. அந்த வகையில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தை மணிரத்னம் எழுதி இருக்கும் விதம் இணைய ரசிகர்களை பேசுபொருளாகியுள்ளது
அபலைப் பெண்ணாக த்ரிஷா
பாலியல் தொழிலாளியாக இருக்கும் இந்திராணி (த்ரிஷா) கமல் காப்பாற்றி வெளியே கொண்டு வருகிறார். பின் த்ரிஷா ஒரு பாடகியாக மாறுகிறார். ஏற்கனவே அபிராமியுடன் திருமணமான சக்திவேல் (கமல்) இந்திராணியுடன் காதல் உறவில் இருந்து வருகிறார். இருவருக்கும் இடையிலான காதல் காட்சிகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. அதை கமல் த்ரிஷா சிறப்பாக நடித்தும் இருக்கிறார்கள்.
படத்தின் இரண்டாம் பாதியில் த்ரிஷாவை சிம்பு கடத்தி செல்கிறார். இப்படி சமுதாயத்தால் கைவிடப்பட்டு இரு ஆண்களிடம் சிக்கிக் கொள்ளும் ஒரு அபலைப் பெண்ணாக த்ரிஷாவை சித்தரித்துள்ளார் மணிரத்னம். மறுபக்கம் கமல் செய்யும் தவறுகளை எல்லாம் சகித்துக் கொண்டு அவரது குற்றங்களின் விளைவுகளை எல்லாம் சந்தித்து வருகிறார் அபிராமி.
கடுப்பான ரசிகர்கள்
பெரும்பாலும் ஆண்களின் உலகத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட தக் லைஃப் படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரமாக வருகிறார்கள். அபிராமி மற்றும் த்ரிஷா. இரு கதாபாத்திரங்களும் ஆண்களின் செளகரியத்திற்காக கற்பனை செய்யப்பட்டு பலியாடுகளாக மட்டுமே கதையில் பயன்படுத்தப் படுகிறார்கள். நாயகர்களை அளவுகடந்து காதலிப்பது தவிர்த்து அவர்களுக்கு என்று குரலே இல்லையா? போதாத குறைக்கு அனைவரும் எதிர்பார்த்த 'முத்த மழை' பாடல் இல்லாததும் ரசிகர்களுக்கு ஒரு பெரும் ஏமாற்றத்தை கிளப்பியுள்ளது.
இன்னொரு பக்கம் த்ரிஷாவை ஒரு பாலியல் தொழிலாளியாக காட்டியது குறித்து அவரது ரசிகர்களிடையே இரு தரப்பு விவாதம் கிளப்பியுள்ளது. சிலர் த்ரிஷாவுக்கு இந்த ரோல் செமையாக செட் ஆகியிருப்பதாகவும் சில த்ரிஷாவிற்கு இந்த கேரக்டர் செட் ஆகவில்லை என்றும் சமூக வலைதளத்தில் கூறி வருகிறார்கள்.
தக் லைஃப்
இப்படம் முதல் நாள் முடிவில் இந்தியா முழுவதும் மொத்தம் சுமார் 17 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக, சாக்னிக் இணையதள தரவுகள் தெரிவிக்கின்றன. அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறையில் படத்திற்கு நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கலாம். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகி இருப்பதால் முதல் வாரம் கடந்தபின் இதே வசூல் தொடருமா என்பது கேள்வியே? முன்னதாக, கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில், 25.6 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.