இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இவரது படங்களுக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். ஹாலிவுட் தரத்திற்கு இவரது படைப்பு இருக்கும் என்பதே திரை ரசிகர்களின் கருத்தாக உள்ளது. மார்வல் சீரிஸ் படங்களை பார்த்து கைதட்டி ரசித்த ரசிகர்களை விக்ரம் படத்தில் எல்சியூ மூலம் புருவம் உயர வைத்தவர் லோகேஷ் கனகராஜ். இதுவே அவருக்கான தனித்துவமாக பார்க்கப்படுகிறது.
கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கூலி திரைப்படம் வெளியானது. கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான இப்படம் சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியானது. இதுவரை படம் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் அனைத்து 100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்க இருக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை ராக்கி, சாணி காகிதம், கேப்டன் மில்லர் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார். கிட்டத்தட்ட கதை டிஸ்கஸன் முடிந்துவிட்டதாகவும், விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்திற்காகத்தான் லோகேஷ் மீசை இல்லாமல் தாடி வளர்ந்த கெட்டப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிக்க இருக்கும் ஹீரோயின் குறித்த புதிய தகவலும் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிருணா மேனன் மற்று கே.சுதா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் நடிக்கும் முதல் படத்திலேயே 2 ஹீரோயின்கள் என்பதே ஆச்சர்யம் தான். அவரது படங்களில் ரொமான்ஸ், காமெடி காட்சிகளை பார்ப்பது அரிதுதான். ஆனால், அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் 2 ஹீரோயின்கள் நடிப்பதை பலரும் வியப்பாக பார்க்கிறார்கள்.