பத்திரிகையாளர் சந்திப்பின் போது தனது கடைசி படமான கூலி குறித்து இனி தான் எடுக்கவிருக்கும் படங்கள் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசினார். தன்மீதான ஒரு சில வதந்திகளுக்கும் அவர் விளக்கமளித்தார். இந்த சந்திப்பில் பிரபல நடிகையுடன் அவரை தொடர்புபடுத்தி பத்திரிகையாளர் கேட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா பிரபலங்களை நோக்கி சில நேரங்களில் பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விகள் நம்மை முக சுளிக்கவே வைக்கின்றன. அண்மையில் நடிகை கெளரி கிஷனின் எடை குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்வி பெரியளவில் சர்ச்சையானது. இந்த நிகழ்வில் கெளரி கிஷன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் பத்திரிகையாளர் தரப்பில் இருந்து மன்னிப்பு கேட்டார். ஆனால் இது போல் பல நிகழ்ச்சிகளில் நடிகை , நடிகர் மற்றும் இயக்குநர்களிடம் பெரும்பாலும் அபத்தமான கேள்விகளே கேட்கப்படுகின்றன. அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் பத்திரிகையாளர் ஒருவர் அநாகரீகமாக கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
பிரபல நடிகையுடன் உறவா ?
கூலி படத்திற்கு பின் முதல்முறையாக லோகேஷ் கனகராஜ் நேற்று ஜனவரி 26 பத்திரிகையாளர்களை சந்தித்தார் . கூலி வசூல் தொடர்பான கேள்விகள் , கைதி 2 , ரஜினி கமல் படத்தில் இருந்து விலகியது என பல்வேறு கேள்விகளுக்கு அவர் தெளிவாக விளக்கம் கொடுத்தார். இந்த சந்திப்பில் இறுதியில் லோகேஷ் கனகராஜிடம் பத்திரிகையாளர் கேட்ட கேள்வி அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.
பிரபல் நடிகை ஒருவருடன் உங்களுக்கு உறவு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வருகின்றன. அது உண்மையா என்று அந்த பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு லோகேஷ் கனகராஜ் " எனக்கு ஏற்கனவே குடும்பம் இருக்கிறது" என்று பதிலளித்தார். இதோடு நிறுத்தாமல் அந்த பத்திரிகையாளர் செகண்ட் ஃபேமிலி உருவாக்க போகும் எண்ணம் இருக்கிறதா' என்று கேள்வி கேட்டார். இதற்கு பதிலளிக்காமல் லோகேஷ் நிகழ்வை விட்டு கிளம்பினார்.
லோகேஷ் கனகராஜிடம் கேள்வி கேட்ட அந்த பத்திரிகையாளர் மீது பத்திரிகையாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
