நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள லியோ படம்  கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டரில் வெளியானது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய், த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மாயா கிருஷ்ணா, வையாபுரி, அனுராக் காஷ்யப், இயக்குநர் ராமகிருஷ்ணன், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர், உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்தார். 


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியான லியோ படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. ரிலீசுக்கு முன்னரே ஏகப்பட்ட சர்ச்சைகளையும் சந்தித்தது. ட்ரெய்லரில் இடம் பெற்ற கெட்ட வார்த்தை, ஆடியோ வெளியீட்டு விழா ரத்து, அதிகாலை சிறப்பு காட்சி கேட்டு நீதிமன்றம் சென்றது, 80% கமிஷன் கேட்டது என ரிலீசாவதற்கு சில மணி நேரம் முன்பு மிகப்பெரிய பஞ்சாயத்தை சந்தித்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் முதல் பாதி சூப்பராகவும், இரண்டாம் பாதி சுமாராகவும் இருந்தது. 


மேலும் லியோ படம் வசூல் தொடர்பாக மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்தது. முதல் நாள் வசூல் ரூ.148.5 கோடி என அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த 6 நாட்கள் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேசமயம் இப்படம் தோல்வி படம், வசூலில் சரிவை சந்திக்கிறது என்றெல்லாம் பேச்சு அடிபட தொடங்கியது. இதனைத் தொடர்ந்து படத்தின் 7வது நாளில், லியோ படம் ரூ.461 கோடி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில், இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கக்கூடிய பிளாஷ்பேக் காட்சிகள் பலவீனமாக இருந்தது. ஆனால் இது பொய்யான ஒன்று என்று தகவல் வெளியாகினது.


இதனை உறுதிப்படுத்தும் விதமாக லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் பதிலளித்துள்ளார். அதில், “லியோ தாஸ் (பிளாஷ்பேக் விஜய்) பற்றிய கதை பார்த்திபன் (விஜய்) வாயில் இருந்து சொல்லவில்லை. யாரோ ஒரு 3வது மனிதரான மன்சூல் அலிகான் தான் பிளாஷ்பேக் கதை சொல்வார். அவர் உண்மை சொல்லிருக்கலாம், பொய் சொல்லிருக்கலாம். காரணம் மன்சூர் அலிகானுக்கு நாங்கள் வைத்த முதல் வசனமே, ‘ ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு பார்வை இருக்கும். அந்த வகையில் என்னோட பார்வையில் லியோ தாஸூக்கு இதுதான் நடந்தது என இருக்கும்”. அதை கடைசி நேரத்தில் இதனை நாங்கள் நீக்கி விட்டோம். 


எடிட்டர் பிஃலோமின்ராஜ் தான் சொன்னார். அந்த காட்சியை வைத்தால் அடுத்த 20 நிமிஷம் நாம சொல்லப்போற இந்த பிளாஷ்பேக் காட்சிகள் பொய் என்பது உறுதியாக தெரிந்து விடும். ரசிகர்களுக்கும் அந்த சந்தேகத்திலேயே வைத்திருப்போம். அதேபோல்  விஜய் உடம்பில் துப்பாக்கியால் சுடப்பட்ட தழும்பு இல்லையே என்ற சந்தேகம் வரும். ஆனால் தன்னோட அடையாளத்தை மறைக்க தெரிந்த விஜய்க்கு தழும்பை மறைப்பது என்ன பெரிய விஷயமா என்ன?” என லோகேஷ் தெரிவித்துள்ளார். 


ஆக லியோ படத்தில் இடம் பெற்ற பிளாஷ்பேக் காட்சிகள் உண்மையில்லை என்பது கிட்டதட்ட உறுதியாகி விட்டது. உண்மையாக சம்பவம் 2வது பாகம் அல்லது லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸில் உருவாகும் படங்களில் காட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.