லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளான படம். இப்படம் குறித்து இயக்குநர் லிங்குசாமி மேடையில் பேசிய கருத்துக்கள் அனைத்தும் ட்ரோல் செய்யப்பட்டன. இன்றும் கூட. அஞ்சான் சுமாரான படம் என்றாலும் தன் மேல் சிலருக்கு இருந்த பொறாமை காரணமாக அந்த படம் கூடுதலான விமர்சனங்களை எதிர்கொண்டதாக லிங்குசாமி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். 

Continues below advertisement

அஞ்சான் பட தோல்வி குறித்து  இயக்குநர் லிங்குசாமி பேசியபோது  " நான் தொடர்ச்சியான வெற்றிகளை ருசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் அஞ்சான் திரைப்படம் வெளியானது. மிக முக்கியமாக, கோலி சோடா , மஞ்சப்பை , சதுரங்க வேட்டை மற்றும் கும்கி ஆகிய படங்களின் மூலம் எனது நிறுவனம் வெற்றிப் பாதையில் பயணித்துக்கொண்டிருந்தது. அது நான் கற்பனை செய்ததை விடவும் பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருந்தது. அதேவேளையில், பையா மற்றும் வேட்டை போன்ற வெற்றிப் படங்களையும் நான் இயக்கியிருந்தேன்.

திரைத்துறையில் சிலருக்கு என் மீது பொறாமை இருந்தது . அதைத் தவிர்க்க முடியாது. அப்படம் வெளியானபோது அதற்கு நாங்கள் செய்த ப்ரோமோஷனைப் பார்த்து சிலருக்குக் கோபமும் இருந்தது. இது படத்திற்கு எதிர்பாராத ஒரு சவாலாக அமைந்தது.  நான் பேசிய  "மொத்த வித்தையையும் இறக்கிருக்கிறேன் "  என்ற வாசகம், சன் டிவியில் நான் அளித்த பழைய பேட்டி ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது. அப்படத்தை குறை சொல்லவே பலர் காத்திருந்தார்கள். 

Continues below advertisement

ரன் படத்தைப் போல அஞ்சான் அமைந்திருந்தால், மற்ற தடைகள் எதுவாக இருந்தாலும் அது வெற்றி பெற்றிருக்கும். எங்கள் தரப்பிலும் ஒரு தவறு நடந்தது. அதனால்தான் நான் படத்தை மீண்டும் எடிட் செய்து, பிரஷாக வெளியிட்டேன். அது அவ்வளவு பெரிய தவறு அல்ல. இருப்பினும், பொறாமை மற்றும் பிற காரணிகள் அனைத்தும் ஒன்றிணைந்ததால், அது மிகப்பரிய பிரச்சினையாகச் சித்தரிக்கப்பட்டது. அந்தத் தாக்கத்திலிருந்து மீண்டு, நான் செய்த தவறை புரிந்துகொள்ள எனக்கு நீண்ட காலம் பிடித்தது . ஆனால் இப்போது என்னால் அத்தகைய சூழ்நிலைகளைத் தாங்கிக்கொள்ள முடிகிறது.

சமீபத்தில் கருப்பு படத்தின் டிரெய்லரைப் பார்த்த பிறகு நான் சூர்யாவை  தொடர்பு கொண்டு, அப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறினேன். வணிக ரீதியான வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, தொடர்ந்து கமர்ஷியல் படங்களிலேயே நடிக்குமாறு அவருக்கு நான் அறிவுறுத்தினேன். ஏனால்  நீங்கள் கமர்ஷியல் களத்தில் இருக்கிறீர்கள் என்பதைத்தான் ரசிகர்கள் எப்போதும் நினைவில் கொள்வார்கள். என்று அவரிடம் சொன்னேன். " என லிங்குசாமி பேசியுள்ளார்.