தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். அல்டிமேட் ஸ்டார், காதல் மன்னன் என்று பல பட்டங்களை ரசிகர்கள் அழைத்திருந்தாலும் அவரை தல என்றே ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர். இது அஜித்குமாரின் அடையாளமாகவே உள்ளது.
தல அஜித்:
சில ஆண்டுகளுக்கு முன்பாக அஜித் தனது ரசிகர்கள் யாரும் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் தல என்று அவரை மறைமுகமாக குறிப்பிட்டு பல இடங்களில் வசனங்கள் இடம்பெற்றிருக்கும்.
இந்த நிலையில், சென்னையில் கமல்ஹாசன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகரும், இயக்குனருமான கே.எஸ்.ரவிக்குமார் கூறியதாவது, "அஜித் என்னை யாரும் இனி மேல் யாரும் தல-னு கூப்பிடாதீங்க. ஏகேனு கூப்பிடுங்க அப்படினு சொன்னாரு. அடுத்த படம் பாத்தீங்கனா அந்த படத்துல முழுக்க தல-னுதான் கூப்பிட்றாங்க. அவரும் நடிச்சுருக்காரு. அதை மாத்தவே முடியாது.
கமல்ஹாசனை கேள்வி கேட்ட கே.எஸ்.ரவிக்குமார்:
அதேபோலதான் உலக நாயகன்னு என்னை கூப்பிடாதீங்கனு சொல்லிருக்காரு. நீங்க யாருசார் அதை சொல்றதுக்கு. நாங்க கூப்பிடுவோம். இது ஒரு தலைக்காதல் போல. நீங்க காதலிக்காவிட்டால் விடுங்க. நாங்க உங்களை காதலிப்போம். நீங்க அதைத் தடுக்க முடியாது. நாங்க கூப்பிடுவோம் சார்.
நீங்க என்ன சார் பத்மஸ்ரீ போட்ருக்கீங்க. பத்மபூஷண், பத்மவிபூஷண் நிறைய பேரு வாங்கிருக்காங்க. தனியா நிக்க ஒரு பேரு வேணும்ல. நாங்க உலகநாயகன்னு தான் கூப்பிடுவோம். அவரு சொல்லிட்டு போகட்டும். அதைவிட சூப்பர் விண்வெளி நாயகன்னு மணி சார் வச்சுருக்காரு. இதைவிட வேறு பட்டம் இல்ல."
இவ்வாறு அவர் பேசினார்.
ப்ளாக்பஸ்டர் ஹிட்:
இந்திய சினிமாவின் பெருமையாக கருதப்படும் கமல்ஹாசனை ரசிகர்கள் அன்புடன் உலக நாயகன் என்று அழைத்து வருகின்றனர். ஆனால், கமல்ஹாசன் தன்னை யாரும் அவ்வாறு அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில், பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உலக நாயகன் என்றே கமல்ஹாசனை அழைப்போம் என்று பேசியுள்ளார்.
கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம், மன்மதன் அம்பு ஆகிய படங்களை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் கமல்ஹாசன் மட்டுமின்றி சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், அஜித், விஜய், சிம்பு என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கியுள்ளார்.