ட்ரெண்ட் செட்டராக மாறும் அளவுக்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என இயக்குநர் கீர்த்தீஸ்வரன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சுதா கொங்கராவின் உதவியாளராக இருந்து 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ட்யூட் படத்தின் மூலம் இயக்குநராக எண்ட்ரீ கொடுத்தவர் கீர்த்தீஸ்வரன். பிரதீப் ரங்கநாதன், ரோகிணி, மமிதா பைஜூ, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ரூ.100 கோடி வசூலை அள்ளி தீபாவளிக்கு வெளியான படங்களில் முதலிடம் பிடித்தது. இந்த நிலையில் ஓடிடியில் வெளியான ட்யூட் படம் மிகப்பெரிய எதிர்மறையான கருத்துகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஒரு நேர்காணலில் ஒரு படத்தை உருவாக்கும்போது அதனுடைய எதிர்காலம் பற்றி யோசிப்பது குறைந்து வருகிறது என்ற கருத்து பலருக்கும் உள்ளது. அதாவது ஒரு 5 ஆண்டுகள் கழித்து பார்த்தால் அந்த படம் அந்த காலத்துக்கும் பொருந்தக்கூடியதாக இருப்பது, உதாரணமாக ஹேராம், விருமாண்டி, கில்லி போன்ற படங்களை சொல்லலாம். ஆனால் இப்போது அது குறைந்து வருகிறதே என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த இயக்குநர் கீர்த்தீஸ்வரன், எனக்கு ட்ரெண்ட்க்கு ஏற்ற மாதிரி படம் எடுப்பதை விட ட்ரெண்ட் செட்டராக மாறும் அளவுக்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அந்த மாதிரி படம் இயக்க முயற்சி மேற்கொண்டு வருகிறேன். இது எங்க போய் முடியும் என்று பார்ப்போம். ஒரு பக்கம் மக்களை பொழுதுபோக்காக மகிழ்விக்கும் நேரத்தில், இன்னொரு பக்கம் புதிய விஷயங்களையும் முயற்சிக்க வேண்டும். அப்படியான கதை ஒன்றை எழுதிட்டு இருக்கேன். அதில் காமெடி, காதல், ஆக்ஷன் என அனைத்தும் இருக்கும். இது எனக்கு பிடித்த ஜானர். அதை என்னவென்று சொல்ல தெரியவில்லை.
உதாரணமாக நீங்கள் குறிப்பிட்ட கில்லி படம் கூட என்ன ஜானரில் குறிப்பிட வேண்டும் என சொல்ல முடியாது. காரணம் அதில் காதல், ஆக்ஷன் என எல்லாமே இருக்கும். அதையும் தாண்டி இதனை விஜய் படம் என சுருக்கி விட முடியாது. அதற்கு பின்னர் தரணி என்ற ஒரு இயக்குநர்,எழுத்தாளரின் உழைப்பு உள்ளது. பிரகாஷ்ராஜின் அட்டகாசமான நடிப்பு உள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி தான் விஜய் உள்ளார். அதனால் தான் கிளாசிக் படமாக கொண்டாடப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.