கே.எஸ் ரவிக்குமார்


தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களுக்கு என தனி பாணியை உருவாக்கியவர் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார். அஜித் , கமல் , விஜய் , ரஜினி என முன்னணி ஸ்டார்கள் அனைவரை இயக்கியுள்ளார். குடும்ப ரசிகர்களை கூட்டம் கூட்டமாக திரையரங்கத்தை நோக்கி ஈர்த்த படங்கள் கே.எஸ் ரவிகுமாருடையவை. கடைசியாக ரஜினிகாந்த்  நடித்த லிங்கா படத்தை இயக்கினார். தற்போது பிற இயக்குநர்களின் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். 


எந்த நடிகரிடமும் வாய்ப்பு கேட்டு நிற்கமாட்டேன்


எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் சமீபத்தில் சென்னையில் பத்மம் என்கிற உணவு விடுதியை தொடங்கியது. இந்த உணவு விடுதியை திறந்து வைக்க சிறப்பு விருந்தினராக கே.எஸ் ரவிக்குமார் கலந்துகொண்டார்.  அப்போது அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். சமீபத்தில் வெளியான விஷாலின் ரத்னம் , கில்லி ரீரிலீஸ் மற்றும் மீண்டும் ரஜினி படத்தை இயக்குவது என பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.


ரத்னம் படம் நல்ல இருந்தா திரையரங்கம் கிடைக்கும்..


ரத்னம் படத்திற்கு போதுமான திரையரங்கம் கிடைக்காதது குறித்து கேள்வி எழுப்பப் பட்டபோது “ஒரு படத்தை ரிலீஸ் செய்வது என்று வந்தால் அதில் இந்த மாதிரியான பிரச்சனைகள் எல்லாம் வரத்தான் செய்யும் . ஒரு படத்தை பார்த்து அது நன்றாக இருந்தால் விநியோகஸ்தகர்கள் அந்த படத்தை வாங்கப் போகிறார்கள். இனி வரும் வாரங்களில் ரத்னம் படம் நல்லா இருந்தால் படத்திற்கு திரையரங்குகள் அதிகரிக்கலாம் “ என்று கே.எஸ் ரவிக்குமார் கூறினார்.


வாய்ப்பு கேட்டு நிற்கமாட்டேன்


சமீப காலங்கள் படங்கள் ரீரிலீஸ் ஆவது குறித்தும் வரும் மே 1 அம் தேதி நடிகர் அஜித் குமார் பிறந்தநாள் வருவதால் அஜித் நடித்து தான் இயக்கிய வரலாறு படம் ரீரிலீஸ் ஆகுமா என்றும் , மீண்டும் ரஜினி படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்குவாரா என்கிற கேள்வி எழுப்பப் பட்டது இதற்கு பதிலளித்த அவர் “திரையரங்குகளில் வெளியிடுவதற்கு புதுப் படங்கள் எதுவும் இல்லை என்றால் இந்த மாதிரி படங்கள் ரீரிலீஸ் ஆவது என்பது திரையங்க உரிமையாளருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நல்லதுதான். மீண்டும் ரஜினி படத்தை நான் இயக்குவேனா? என்றால் அதற்கான சரியான நேரம் அமைய வேண்டும் . அதுமட்டுமில்லாமல் ரஜினி படத்தை இயக்கவேண்டும் என்றால் ரஜினிதான் என்னை கேட்க வேண்டும் . அதேபோல் அஜித் நடித்த வரலாறு படம் நான் இயக்கியது என்றாலும், நான் அந்த படத்தின் தயாரிப்பாளர் இல்லை.


அதற்கு நீங்கள் ஏ.எம் ரத்னமிடம் தான் கேட்க வேண்டும் . என்னுடைய படங்களை ரீரிலீஸ் செய்யுங்கள் என்றும், படம் இயக்க வாய்ப்பு கொடுங்கள் என்றும் நான் எந்த நடிகரிடமும் சென்று வாய்ப்பு கேட்டு நிற்க மாட்டேன்” என்று கே.எஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்