தனது மாஸ்டர்பீஸ் படங்களில் ஒன்றான முந்தானை முடிச்சு படத்தில் மிக முக்கியமான காட்சி ஒன்றை எப்படி எடுத்தோம் என நேர்காணல் ஒன்றில் இயக்குநர், நடிகருமான கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார். 


1983 ஆம் ஆண்டு இயக்குநர் கே.பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடித்த படம் “முந்தானை முடிச்சு”. இந்த படத்தில் நடிகை ஊர்வசி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். முந்தானை முடிச்சு படம் எப்போது பார்த்தாலும் ரசிக்கத்தக்க வகையில் படமாக்கப்பட்டிருப்பதே அதன் வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 


இந்த படம் பாக்யராஜின் மாஸ்டர்பீஸ் படங்களில் ஒன்று. இதில் கணவன் - மனைவி உறவு, முருங்கைக்காய் வசியம் என பல விஷயங்களை தனது ஸ்டைலில் சொல்லியிருந்தார் கே.பாக்யராஜ். இப்படத்தில் தீபா, எஸ்.எஸ்.சௌந்தர், பேபி சுஜிதா, பயில்வான் ரங்கநாதன், கோவை சரளா என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக இன்றைக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தனமாக மக்கள் மனதை கொள்ளைக் கொண்ட நடிகை சுஜிதா நடித்திருப்பார். இந்த படத்தில் குழந்தை தொடர்பான காட்சியை எப்படி படமாக்கினோம் என்பதை பாக்யராஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். 


அதாவது, “முந்தானை முடிச்சு படத்தில் என்னுடைய கைக்குழந்தை நாணயத்தை விழுங்கி விடுவதாக காட்சி ஒன்று அமைக்கப்பட்டு இருக்கும். அந்த காட்சியை என்னுடைய உதவி இயக்குனர்களிடம் படமாக்கும்படி சொல்லிவிட்டு நான் சாப்பிட சென்று விட்டேன். நான் திரும்பி வந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து பார்த்தபோது அந்த காட்சி படமாக்கப்படவில்லை. ஏன் என உதவி இயக்குனர்களிடம் கேட்டபோது நிறைய டேக் எடுத்தும் நாம் நினைத்தபடி காட்சி வரவில்லை என சொன்னார்கள்.


அந்த காலத்தில் பிலிம் ரோல் தான் என்பதால் நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டதால் அதுவும் வேஸ்ட் ஆகி இருந்தது. அந்தக் காட்சியின்படி தரையில் கிடைக்கும் காசை அந்த குழந்தை தவழ்ந்து சென்று தனது கையால் எடுத்து வாயில் வைக்க வேண்டும் என்பதே எழுதப்பட்டிருந்தது. கைக்குழந்தையிடம் எதை சொல்லி காசை எடுக்கும்படி புரிய வைப்பது என நான் உட்பட யாருக்கும் புரியவில்லை. ஓரமாக அமர்ந்து சிறிது நேரம் யோசித்த பின்பு ஒரு ஐடியா வந்தது. 


சட்டென்று பக்கத்தில் இருந்த கடைக்கு சென்று ஒரு சிறிய தேன் பாட்டில் வாங்கி வர சொன்னேன். அந்தத் தேனில் காசை நினைத்து குழந்தையின் உதட்டில் வைத்தேன். இப்படியே நான்கு, ஐந்து முறை செய்ததால் தேன் இனிப்பு சுவை குழந்தைக்கு புரிந்து விட்டது. உடனடியாக ஆறாவது முறை நான் தேனில் நினைக்காமல் காசை அப்படியே தரையில் போட்டு விட்டேன். நான் ஆக்ஷன் என சொல்லிவிட்டேன். குழந்தையும் ஏற்கனவே தேனின் சுவையை அறிந்து வேகமாக வந்து தன் கையாலே காசை எடுத்து வாயில் வைக்க காட்சி ஓகே ஆகி போனது என தெரிவித்துள்ளார்.