படம் ப்ளாப் என்ற ரசிகர்கள்...ஒரு வாரம் ரஜினியின் மெனக்கெடல்...பின் நடந்தது மேஜிக்..முள்ளும் மலரும் ரீகேப்
மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் திரைப்படம் ஃப்ளாப் என அறிவிக்கப்பட்ட போது ரஜினி தனது தந்தைக்கு கொடுத்த ஆதரவைப் பற்றி ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்

அபூர்வ ராகங்கள் படத்தின் மூலதம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் ரஜினிகாந்த். இன்று 160 படங்களுக்கும் மேல் நடித்து இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். ரஜினி என்றால் அவரது ஸ்டைல்தான். செண்டிமெண்ட் , ஆக்ஷன் என எல்லா காட்சிகளிலும் ரசிகர்கள் பார்ப்பது அவரை ஸ்டைலைதான். ஒரு சில படங்களில் ரஜினி தனது வழக்கமான நடிப்பில் இருந்து விலகி கதாபாத்திரத்திற்கு முக்கியத்தும் அளித்து நடித்துள்ளார். அந்த வகையில் மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் திரைப்படம் ரஜினிக்குள் இருக்கும் ஒரு தேர்ந்த நடிகரை வெளியேகொண்டு வந்த படங்களில் ஒன்று. இந்த படம் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்
முள்ளும் மலரும் படம் பற்றி ஜான் மகேந்திரன்
1978 ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கி ரஜினி நடித்த திரைப்படம் முள்ளும் மலரும். தமிழ் சினிமாவில் எல்லா காலமும் கொண்டாடும் கிளாசிக் படங்கள் வரிசையில் இந்த படம் இருந்து வருகிறது. இந்த பட பற்றி ஜான் மகேந்திரன் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில் அவர் " முள்ளும் மலரும் படம் வெளியானபோது அது தோல்விப்படம் என்று அறிவித்துவிட்டார்கள். அதுவரையும் சிக்ரெட் பிடிப்பது , தலைமுடியை எடுத்துவிடுவது என ரஜினியை ஸ்டைலாக பார்த்த ரசிகர்கள் கை இல்லாமல் ரஜினியை பார்த்ததும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்போது அப்பா கொஞ்சம் உடைந்து போய்விட்டார்.
அப்போதுதான் ரஜினி சார் எந்த படப்பிடிப்பு இருந்தாலும் தினமும் இரவு எங்கள் வீட்டிற்கு வருவார். அவரது பைக் ஹெட்லைட் அப்பா இருக்கும் அறையின் மேல் அடிக்கும். இருவரும் கிளம்பி வெளியே செல்வார்கள். பின்னிரவில் ரஜினி அப்பாவை வந்து டிராப் செய்வார். காலை ஆழ்வார்பேட்டையில் கோயிலுக்கு போய்விட்டு அப்பாவை வந்து பார்ப்பார். ஒரு நடிகர் தான் மதித்த இயக்குநர் எடுத்த படம் சரியாக போகவில்லை அதனால் அவர் துவண்டு போய்விடக் கூடாது என்பதற்காக ஒரு வாரம் அப்பாவை இரவும் காலையும் வந்து பார்த்துவிட்டு சென்றார். ஒரு வாரம் கழித்து ஃபேமிலி ஆடியன்ஸ் உள்ளே வந்து முள்ளும் மலர் படத்தை கொண்டாடினார்கள். அதுவரை ரஜினி சார் என் மகேந்திரன் என்கிற இயக்குநருக்கு தோள் கொடுத்து நின்றார். " என தெரிவித்துள்ளார்.





















