இளையராஜா இசை தான் வேண்டும் என்று நான் 13 படங்களை தவறவிட்டேன் என நடிகரும், இயக்குநருமான ஜி.எம்.குமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


1986 ஆம் ஆண்டு சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு,பல்லவி உள்ளிட்ட பலரும் நடித்த படம் “அறுவடை நாள்”. இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தை ஜி.எம்.குமார் இயக்கியிருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்திற்குப் பின் அவர் பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் ஆகிய 3 படங்களை மட்டுமே இயக்கியிருந்தார். உருவம் படத்தால் பெரும் நஷ்டத்தை சந்தித்த ஜி.எம்.குமார் அதன்பிறகு நடிகராக அறிமுகமானார். 


பாரதிராஜா இயக்கிய கேப்டன் மகள் படத்தில் வில்லன் கேரக்டரில் அறிமுகமான அவருக்கு 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் படம் திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தில் கண்டிப்பு மிக்க அப்பாவாக கடைசியில் தன் மகன் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் தந்தையாக தென்மாவட்ட மக்களின் உணர்வுகளை அப்படியே பிரதிபலித்திருப்பார். தொடர்ந்து மாயாண்டி குடும்பத்தார், அவன் இவன், தாரை தப்பட்டை, அசுரன், கர்ணன் ஆகிய படங்கள் ஜி.எம்.குமாரின் நடிப்பில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. 






இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேட்டியளித்துள்ள அவரிடம், அறுவடை நாள் படம் பார்த்து விட்டு இளையராஜா கோபப்பட்டது பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அறுவடை நாள் படம் உருவாகும் போது அதிகமான ட்யூன்களை அவரிடம் பெற வேண்டும் என முடிவு செய்தேன். கதையை சொல்லும் போது கிளைமேக்ஸ் கிட்ட ஒரு சிச்சுவேஷன் சொல்லி பாடல் வேண்டும் என கேட்கிறேன்.அது எப்படி வரும்..வராதே என அவர் சொல்ல, எங்களுக்கும் அது வராதுன்னு தெரியும். இருந்தாலும் நாங்க மாத்தி பண்ணிருவோம் என சொல்லி சம்மதம் வாங்கிட்டேன். 


பின் என்ன மாதிரி பாட்டு வேணும் என கேட்க, நான் சொன்ன காதல் ஓவியம் பாடும் காவியம் மாடலில் தேவனின் கோவில் பாடல் போட்டுக் கொடுத்தார். கதையில பாட்டு வரவே இல்ல. அதனால டைட்டில் வர்றப்ப இருக்கமாதிரி மாத்திட்டோம். ஆனால் டைட்டில் சிறியது என்பதால் அந்த பாட்டுல வரும் ஹம்மிங்கை தூக்கிட்டோம். ஏவிஎம் ராஜேஸ்வரில ரீ-ரிக்கார்டிங் போற முன்னாடி பிரிவ்யூ பாக்குறோம். 


இளையராஜா படம் பார்த்துட்டு வேகமாக அவர் கார்ல போய் உட்கார்ந்தாரு. விஸ்வநாதன் அவரிடம் போய் படம் எப்படி இருக்குன்னு கேட்டாரு. உடனே டென்ஷனான ராஜா நான் தான் சொன்னேன்ல பாட்டு அந்த இடத்துல வராதுன்னு என சொல்லிட்டு படம் நல்லாருக்கு. நாளைக்கு வாங்க ரீ-ரிக்கார்டிங் வச்சிக்கலாம் என சொன்னாரு. மறுநாள் போன அந்த காட்சிகளை தூக்கிட்டு வேற காட்சியை வைக்க சொன்னாரு. உடனே சித்ராவை தேவனின் கோவில் பாட்டை ஹம்மிங் பண்ண வச்சாரு. 


எனக்கு அப்படியே தெய்வீகமான உணர்வை ஏற்படுத்திடுச்சி. அதை முடிச்சிட்டு எங்களை பார்த்து இப்ப என்ன பண்ணுவீங்க ஒரு குழந்தைத்தனமான சைகை செய்தார். அவருக்குள்ள இருக்குற அந்த குணம் ரொம்ப நெருக்கமானவங்களுக்கு மட்டும் தான் தெரியும். அந்த படத்திற்கு பிறகு என்னை தேடி 13 தயாரிப்பாளர்கள் வந்தார்கள். நான் இளையராஜா தான் இசை என சொல்ல அத்தனை பேரும் வேண்டாம் என சொல்கிறார்கள். 


இது எப்படியோ இளையராஜா காதுக்கு செல்கிறது. அப்ப இன்னொரு படத்துக்காக கே.ஆர்.ஜி இளையராஜாவை மீட் பண்றாரு. அப்ப நான் மியூசிக் போடுறேன். ஜி.எம்.குமார் இயக்கட்டும் என சொல்ல நீயே வேண்டாம் என அவர் சென்று விட்டார். உடனே இளையராஜா என்ன கூப்பிட்டு என்னால நீ 13 படம் விட்டுட்ட..உன்னால நான் ஒரு படம் விட்டுட்டேன் என சொன்னதாக ஜி.எம்.குமார் தெரிவித்துள்ளார்.