இயக்குநர் கெளதம் மேனன் பாடுவார் என்று நமக்குத் தெரியும், ஆனால் ராப் பாடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.


இயக்குநர் கௌதம் மேனன் டைரக்‌ஷன் மட்டுமில்லாமல் நடிகராகவும் கலக்கிக்கொண்டு இருக்கிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மைக்கேல், விடுதலை, பத்து தல ஆகிய படங்களில் நடித்து தனது நடிப்பு மீதான தாகத்தை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கௌதம். இவரது நடிப்பை கலாய்ப்பவர்களும் இருக்கிறார்கள், அதே நேரத்தில் ரசிக்கக் கூடியவர்களும் இருக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் அவருக்கு கவலையும் இல்லை.


நடிகராக மட்டுமில்லாமல் பாடுவதிலும் ஆர்வம் கொண்டவர் கௌதம் மேனன். தான் இயக்கிய நீதான் என் பொன்வசந்தம் திரைப்படத்தில் ஒரு பாடலைப் பாடியிருந்தார் கௌதம் மேனன். இதனைத் தொடர்ந்து கோலி சோடா 2 திரைப்படத்தின் தீம் சாங்கில் பாடியிருப்பார் கௌதம் மேனன்


தூரிகா பாடலிற்காக ட்ரோல் செய்யப்பட்ட கௌதம் மேனன்


நவரசா திரைப்படத்தில் இடம்பெற்ற தூரிகா பாடலை பாடி வீடியோ ஒன்றை அப்போது வெளியிட்டிருந்தார் கௌதம் மேனன். இந்தப் பாடலுக்காக  இணையதளத்தில்  பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார் அவர். கௌதம் மேனனிற்கு நல்ல இசை ரசனை இருக்கிறது என்று ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் இப்படி எல்லாம் பாடினால் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தார்கள்.


நிரா பாடலைப் பாடிய கௌதம்


கௌதம் மேனனிடம் இருந்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று என்றால், யார் என்ன சொன்னாலும்  அவரது மனதிற்கு பிடித்ததை செய்வதற்கு அவர் தயங்கியதே இல்லை. அந்த வகையில்  சித்தார்த் நடிப்பில் அண்மையில் வெளியாகியுள்ள டக்கர் திரைப்படத்திலும் கௌதம் பாடியுள்ளார்.


இந்தப் படத்திற்கு  நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள காதல் தோல்விப் பாடலான நிரா கடந்த ஆண்டே வெளியாகி ரசிகர்களை முணுமுணுக்க வைத்து வருகிறது. தற்போது டக்கர் திரைப்படம் வெளியானப் பின்பு இந்தப் பாடல் இன்னும் அதிகமான ரசிகர்களை சென்று சேர்ந்திருக்கிறது.


இந்தப் பாடலில் இரண்டாம் சரணத்தில் ஒரு ராப் பகுதி வருகிறது. அதை நன்றாகக் கேட்டுப் பாருங்கள். எங்கோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறதில்லையா... ஆம் அது கௌதம் மேனனின் குரல்தான். இதுவரை மெல்லிசை பாடல்களை பாடி கேட்ட அந்தக் குரலை ராப் இசையில்  கேட்பதற்கு புதுமையான அனுபவமாக இருக்கிறது.


படபடவென்று ஒரு புரொஃபஷனல் ராப் பாடகருக்கு சற்றும் சளைக்காமல் இந்தப் பாடலைப் பாடியுள்ளார் கௌதம். நிச்சயம் இந்தப் பாடலை யாராலும் ட்ரோல் செய்ய முடியாது என்று உறுதியாக சொல்லலாம்!