கெளதம் மேனன்
காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா,வாரணம் ஆயிரம், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களை இயக்கிய கெளதம் மேனன் (Gautham Menon) தற்போது இயக்கி இருக்கும் படம் துருவ நட்சத்திரம் (Dhruva Natchathiram). விக்ரம், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், விநாயகன், ஆர்.பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடித்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். நவம்பர் 24ஆம் தேதி இந்தப் படம் திரையரங்கத்தில் வெளியாக இருக்கிறது.
ரிலீஸில் சவால்கள்
6 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தை கடந்த 8 மாதங்கள் கடின உழைப்பால் பல்வேறு தரப்பினருடன் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார் கெளதம் மேனன். அதுவரை குகைக்குள் பதுங்கியிருந்த அத்தனை பிரச்சனைகளும் ரிலீஸ் தேதியை அறிவித்தவுடன் தற்போது மீண்டும் தலைதூக்கி இருப்பதாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
படம் பழசாகிடுச்சுனு நினைக்கிறாங்க..
துருவ நட்சத்திரம் படத்திற்கு இருக்கு மிகப்பெரிய சிக்கலை விளக்கியுள்ளார் கெளதம் மேனன். “ஏற்கெனவே பல வருடங்கள் கிடப்பில் இருந்ததால் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுவதற்கு விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். கூடுதலாக படத்தின் மீது கோர்ட்டில் வழக்கு இருக்கிறதோ என்கிற சந்தேகம் அவர்களுக்கு இருக்கிறது.
இதன் காரணத்தினால் நான் தனிப்பட்ட முறையில் தெலுங்கு மற்றும் கன்னட வெளியீட்டிற்காக பல தரப்பு விநியோகஸ்தர்களிடம் பேசி படத்தின் மீது இருந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு விட்டன என்பதை உறுதிப்படுத்தி வருகிறேன். நீங்கள் நம்பாமல் கூட போகலாம், ஆனால் என்னுடைய படம் பல வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டாலும் ஏதோ போன வாரம் படப்பிடிப்பு முடிந்தது போல் பார்க்க புதிதாக இருக்கிறது. அதனுடைய கதை எந்த வகையிலும் பழசாகிவிடவில்லை. இந்தப் படத்தை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்காக திரையிட்டு படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
ஆதிக்கம் செலுத்து ஓடிடி தளங்கள்
” அதே நேரத்தில் ஓடிடி தளத்தைப் பொறுத்தவரை துருவ நட்சத்திரம் படத்தை வாங்க இன்னும் எந்த ஓடிடி தளமும் இதுவரை முன்வரவில்லை. இந்த தளங்கள் அடுத்த ஆண்டு வெளியிடுவதற்கான படங்களையே முடிவு செய்துவிட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். ஓடிடி தளங்கள் வாங்காத காரணத்தினால் விநியோகஸ்தர்களுக்கு படத்தை வெளியிட தயங்குகிறார்கள். ஒருகாலத்தில் சேட்டலைட் உரிமத்தை சார்ந்திருந்த படங்கள் இப்போது ஓடிடி தளத்தை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஓடிடி தளங்கள் தான் நம் படங்களின் ரிலீஸ் தேதியை தீர்மானிக்கின்றன. ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்களை அவர்களால் வெளியிட முடியாத காரணத்தினால் நம் படங்களை அவர்கள் சொல்லும் தேதியில் வெளியிடுமாறு வலியுறுத்துகிறார்கள். துருவ நட்சத்திரம் படத்தை அடுத்த வரும் ஏப்ரல் மாதம் வெளியிடும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். நான் அதற்கு மறுத்துவிட்டேன்.
ஓடிடியின் தளங்களின் மேல் கோபம்
ஓடிடி தளங்கள் தமிழகத்தில் ஒரு படத்தை சொந்தமாக தயாரிக்க நினைத்தால் அது எந்த மாதிரியான படங்கள் வெளியாக வேண்டும் என்று ஓடிடி தளங்கள் தான் முடிவு செய்கின்றன. அவர்களுக்கு ஹாரர் வேண்டுமென்றால் ஹாரர். க்ரைம் த்ரில்லர், ரொமாண்டிக் என அவர்களுக்குத் தேவையான படங்களையே நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள்.
அதற்கு அவர்களுக்கு ஒரு ரிஸர்ச் இருக்கிறது. ஒரு இயக்குநர் ரிஸர்ச்சின் அடிப்படையில் படம் எடுக்க முடியாது. நம்மிடம் இருக்கும் கதைகளையே அவர்கள் வாங்க முன்வர வேண்டும். இந்த ஓடிடி தளங்களின் உயர் நிர்வாகத்தில் அமர்ந்திருக்கும் ஒரு சிலருக்கு நம் படங்களின் பெயர்கள் கூட சரியாக தெரிவதில்லை.
இறைவன் படத்திற்கு ஐரவன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நம் மொழி புரிய வேண்டும் என்று கட்டாயம் இல்லை ஆனால் நம் கதைகளை அவர்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும் “ என்று கெளதம் மேனன் கூறியுள்ளார்