இயக்குநர் கௌதம் மேனன் கல்லூரி நிகழ்வு ஒன்றில் சினிமா ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 


மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான கௌதம் மேனன் தொடந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், விண்ணை தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா என வித்தியாசமான கதைக்களத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.






நடிகராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட கௌதம் மேனன் சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கியிருந்தார். சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்த இப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்தது. மேலும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இட்னானி நடித்திருந்தார்.


இந்த படம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதியான தியேட்டர்களில் வெளியானது. முன்னதாக வெந்து தணிந்தது காடு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. எதிர்பார்த்தை போல படம் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சக்ஸஸ் பார்ட்டிகளும் கொண்டாடப்பட்டது. 


இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது வெந்து தணிந்தது காடு படத்தில் இடம் பெற்ற மல்லிப்பூ பாடல் குறித்து விளக்கமளித்தார். அப்பாடல் பெண்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தாலும் பெண் ஆடும் பாடலாக இல்லாமல் ஆண்கள் ஆடினால் எப்படி இருக்கும் என நினைத்து அப்பாடலை உருவாக்கினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது என கூறியுள்ளார். 


மேலும் தியேட்டர்களில் படம் பார்க்க செல்லும் ரசிகர்கள் 10-15 விநாடிகள் கொண்ட காட்சியை படம் பிடித்து சமூக வலைத்தளங்களின் மூலம் பலருக்கும் பகிர்கின்றனர். இது தவறான செயல். புகைப்படம் எடுங்கள். ஆனால் வீடியோக்களை பகிராதீர்கள் என கௌதம் மேனன் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.