துருவ நட்சத்திரம்
கெளதம் மேனன் இயக்கி விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரித்து வர்மா, சிம்ரன், விநாயகன், ஆர் பார்த்திபன், கெளதம் மேனன், ராதிகா சரத்குமார், டி டி நீலகண்டன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.
ஆக்ஷனில் இறங்கிய கெளதம்
பொதுவாகவே ஆக்ஷன் இருந்தாலும் காதலை தன்னுடைப் படங்களில் மையப்படுத்தியே இயக்கி வந்திருக்கிறார் கெளதம் மேனன். பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, காக்க காக்க என இந்தப் படங்கள் ஆக்ஷன் த்ரில்லாராக அமைந்திருந்தாலும், இதில் காதல் காட்சிகள் கதையுடன் மிக இயல்பாக கோர்க்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த முறை துருவ நட்சத்திரம் படத்தில் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே காதல் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கெளதம் மேனன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தன்னுடைய படங்களில் இருக்கும் ஆக்ஷன் காட்சிகளும் முழுக்க முழுக்க மிகையாக இல்லாமல் எதார்த்தமான வகையில் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
யாரும் லவ் ஸ்டோரியை விரும்புவதில்லை..
இப்போதெல்லாம் எந்த நடிகரும் முழுக்க முழுக்க ஒரு லவ் ஸ்டோரியில் நடிக்க விரும்புவதில்லை என்று கெளதம் மேனன் கூறியிருக்கிறார். “நான் எந்த நடிகரிடம் சென்று கதை சொன்னாலும் அவர்கள் இப்போதைக்கு தான் ஒரு காதல் கதையில் நடிக்க விருப்பப்படவில்லை என்றும், அதைத் தவிர ஒரு ஆக்ஷன் படம் என்றால் உடனே படத்தில் நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறுகிறார்கள். சமீபத்தில் வெளியான ஜெயிலர், ஜவான், விக்ரம் மாதிரியான படங்களில் நடிக்க மட்டுமே அவர்கள் விரும்புகிறார்கள்” என்று கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவுடன் கூட்டணி
”ஒவ்வொரு நடிகரும் தான் ஒரு படத்தில் நடிக்கும்போது இதில் எனக்கு என்ன கிடைக்கும் என்பதே அவர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது. அப்படி பார்க்காமல் இருக்கும் சிலரில் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா. ஒரு கதையில் தான் தன்னை எப்படி புதுமையாக வெளிப்படுத்திக் கொள்ள முடியும் என்பதைப் பார்க்கிறார். அது ஆக்ஷனாக தான் இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதில்லை.
தான் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் கதைகளையே அவர் தேர்வு செய்கிறார். நான் அவரிடம் ஒரு காதல் கதையை சொல்லி இருக்கிறேன். அவருக்கு அது ரொம்பப் பிடித்திருந்தது. கூடிய சீக்கிரம் இது குறித்தான அடுத்தக்கட்ட வேலைகளை தொடங்க திட்டமிட்டிருக்கிறோம்” என்று கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
கலந்துகட்டி அடிக்கும் எஸ். ஜே சூர்யா
சமீப காலங்களில் அதிகம் பாராட்டப்படும் நடிகர்களில் ஒருவர் எஸ்.ஜே சூர்யா. மாநாடு, நெஞ்சம் மறப்பதில்லை, மார்க் ஆண்டனி தற்போது ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் தன்னை வெளிப்படுத்து வருகிறார். எப்போது சற்று மிகைப்படுத்தலோடு நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா ஜிகர்தண்டா படத்தின் மூலம் தன்னால் குறைவாக நடித்தும் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளார். தற்போது கெளதம் மேனனின் கதையில் அவரை க்ளாசிக் கௌதம் மேனன் பட ரொமாண்டிக் ஹீரோவாக பார்க்க எதிர்பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.