கமல்ஹாசன் நடித்த குணா படம் பார்த்து விட்டு தன்னுடைய சினிமா பார்வை மாறியதாக இயக்குநர் சேரன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement


அந்த நேர்காணலில் பேசிய அவர், “நான் முதல் முதலாக ஒரு கதை எழுதி அதை சில பிரபலங்களுக்கு சொன்னேன். ஒரு கட்டத்தில் சினிமா பற்றிய பார்வை மாறும்போது அந்த கதையை எழுத வேண்டாம் என ஓரம் கட்டி விட்டேன். அதன்பிறகு நான் யோசித்த கதை தான் பாரதி கண்ணம்மா. அந்த பட கதையுடன், இன்னும் 2 கதை தயார் செய்து என்னுடைய தயாரிப்பாளர் ஹென்றியிடம் கூறினேன். 2 கதையை கிட்டதட்ட 45 நிமிடம் சொன்னேன். இரண்டும் ரிஜக்ட் என கூறி விட்டார்.


அவர் என்னிடம் வேறு மாதிரி புதிதாக எதிர்பார்ப்பதாக சொன்னார். அதைக் கேட்டதும் நமக்கு கதை சொல்லவே தெரிய வில்லையா அல்லது இயக்குநராக தகுதி இல்லையா என்ற கேள்வி எழுகிறது. எனக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது. எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கு, எங்கேயே தப்பு நடந்து விட்டதே என ஆத்திரம் வந்தது.


உடனே, நான் ஒருவர் தன் காதலி இறந்ததை பறை அடித்து ஊருக்கே செய்தி சொல்கிறான் என பாரதி கண்ணம்மாவின் ஒன்லைனை கூறுகிறேன். இது சூப்பரா இருக்கே தயாரிப்பாளர் ஹென்றி சொன்னார். அங்கிருந்து மீண்டும் ஒருமுறை என்னுடைய சினிமா பற்றிய பார்வை மாறியது. அதற்கு காரணம் கமல்ஹாசன் தான். நான் குணா படம் பார்த்து விட்டு எப்படிப்பட்ட படம், யார் இந்த படத்தை எடுத்தது, இது தமிழ்படமா என நூறாயிரம் கேள்வி எழுந்தது.


ஒரே நாளில் தொடர்ந்து 3 காட்சிகள் பார்த்தேன். இப்படிப்பட்ட படம் நாம் எடுக்க வேண்டும் என தோன்றியது. உடனே சந்தான பாரதியிடம் கேட்டு மகாநதி படத்தில் நான் வேலை பார்த்தேன். அங்கு படம் எடுக்கிற விதத்தைப் பார்த்து எல்லாம் மாறுது. அப்படிப்பட்ட சூழலில் வந்தது தான் பாரதி கண்ணம்மா. என்னுடைய உதவி இயக்குநர்களில் சொல்வது ஒன்று தான். நீங்கள் என்னிடம் இருந்து கற்றுக்கொண்டு உங்களுக்கு ஏற்ற மாதிரி படம் எடுங்கள். என்னை மாதிரி படம் எடுக்க வேண்டும் என்பது கிடையாது. 


சேரனின் சினிமா பயணம்


தமிழ் சினிமாவில் வித்யாசமான படங்களை திறம்பட இயக்கியவர் சேரன். பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், பொற்காலம், வெற்றிக்கொடிகட்டு, ஆட்டோகிராஃப், பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், மாயக்கண்ணாடி என ஏகப்பட்ட படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் அவர் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் 20 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் ஆகி இன்றைய இளம் வயதினரிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.