Director Cheran: ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான மோதலால் தங்களது ஒன்றரை வருட உழைப்பு வீணாகிவிட்டதாக, இயக்குனர் சேரன் வேதனை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சேரன் வேதனை:
சங்ககிரி ராஜ்குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒன் மேன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சத்யராஜ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் பங்கேற்று பேசினர். அந்த வகையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் சேரன், “ராமதாஸ் அய்யாவின் படத்தை கூட எனக்கு முன்பாக எழுதியவர் ராஜ்குமார் தான். இவர் தான் அந்த படத்திற்கான கதையை எழுதி இயக்க வேண்டி இருந்தது. ஆனால் இதற்கு மதிப்பு கூட்ட வேண்டும் என கருதியும், கூடுதல் அம்சங்களை சேர்க்க வேண்டி வலியுறுத்தியும் தயாரிப்பாளர்கள் என்னை அணுகினார். ராஜ்குமாரையும் அறிமுகப்படுத்தி, இவர் படம் தொடர்பான நிறைய குறிப்புகளை வைத்துள்ளார். அதையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என வலியுறுத்தினர். ஆனால் அது எனக்கு நெருடலாக இருந்தது.
தட்டி பறிக்கப்பட்ட வாய்ப்பு..!
தான் எடுக்க வேண்டும் என நினைத்து ஒருவர் முயற்சிகளை மேற்கொண்ட படத்தை நான் ஏன் எடுக்க வேண்டும்? தம்பியே எடுக்கட்டும், நான் வேண்டுமானால் உறுதுணையாக இருக்கிறேன் என ராமதாஸ் அய்யாவிடமே கூறினேன். ராஜ்குமாருக்கு என ஒரு கனவு இருந்து இருக்கும், அவருக்கு ஒரு அடையாளம் வேண்டும். அழகாக அந்த கதையை தொகுத்து இருப்பார். அதை நான் எடுத்தால் அவரது வாய்ப்பை தட்டி பறித்ததை போன்று இருக்கும். ஆனால் இந்த கதை இன்னும் சிறப்பாக வரவேண்டும் என பல காரணங்களை கூறினர். அதன் பிறகு ராஜ்குமாரை அழைத்து, என்னால் மறுக்கமுடியவில்லை, கேட்கிறார்கள், ஒரு பெரிய மனிதர் என்னை இப்படி வற்புறுத்தி கேட்கையில் வேண்டாம் என சொல்லும் அளவிற்கு அன்பை உதாசீனப்படுத்த முடியாது. வேறு வழியில்லாமல் அந்த வாய்ப்பை ஒப்புக்கொள்கிறேன் என கூறினேன். ஆனால், நீங்கள் வேண்டாம் என அழுத்தமாக சொல்லி இருக்கலாமே என என் மீது வருத்தம் கொண்டார்.
ஒன்றடை வருட உழைப்பு..!
ஆனால் நான் என்ன செய்வது. உனக்கு நல்லது செய்த அதே சேரன் தான் உனக்கு கெடுதல் செய்ததாக கூட இருக்கட்டுமே என கூறினேன். அப்படிப்பட்ட ஒரு சூழலில் காலம் நம்மை தள்ளும். வேறு வழியில்லை. ஆனால், இப்போது பாருங்கள் அந்த படம் அவருக்கும் இல்லை, எனக்கும் இல்லை. கடைசியில் யாருக்குமே இல்லாமல் போய்விட்டது. ராஜ்குமாரின் உழைப்பு சுமார் 2 வருடங்கள் இருந்து இருக்கும். என்னுடைய உழைப்பு சுமார் ஒன்றரை வருடம் இருந்தது. 15 பேர் கொண்ட குழு எங்கெங்கோ பயணித்து, காடு மேடு எல்லாம் அலைந்து படப்பிடிப்பிற்கான இடங்களை அடையாளம் கண்டோம். 1970களுக்கான வரலாறு என்பதால் அதற்கேற்றவாறான நபர்களை பிடித்தோம் கதையை பதிவு செய்தோம். இப்போது எல்லாமே மாறியுள்ள நிலையில், அந்த காலத்திற்கான கிராமங்களை எங்கே பிடிப்பது. ஆனால் தமிழ்நாடு முழுவதுமாக அலைந்தோம். அப்போது இருந்த ஆட்களின் தோற்றமே வேறு. இப்போது அத்தகைய தோற்றத்திலான ஆட்களே இல்லை.
சேர்ந்த குடும்பம்.. நின்றுபோன திரைப்படம்
ஒட்டுமொத்தமாக கதையை தொகுக்க கடுமையாக உழைத்து தரவுகளை சேகரித்த போது படம் நடக்காது என தெரிவித்தனர். அது எங்களுக்கு எவ்வளவு பெரிய வலியாக இருந்து இருக்கும்? வேலை பார்த்த வரை ஊதியம் கொடுத்துவிட்டோம் என கூறலாம். ஆனால், ஊதியம் அல்ல எங்களது இலக்கு. எங்களுடைய ஆலோசனை, கற்பனை, மூளைக்குள் ஊறிய கதை ஆகியவை வெளியே வந்தால் ஊதியம் குறித்து நான் கவலைப்படவே மாட்டேன். அப்படிப்பட்ட பைத்தியகாரத்தனமான இயக்குனர் நான். ஆனால், அந்த படம் வரவில்லை. என்ன காரணம் என்றால் அப்பா - மகன் சண்டை போட்டார்கள் படம் நின்றுபோய்விட்டது. இப்போது அப்பா - மகன் சேர்ந்துவிட்டார்கள் ஆனால் படம் எடுக்க வாய்ப்பில்லை” என இயக்குனர் சேரன் வேதனை தெரிவித்துள்ளார்.
