தமிழ் திரையுலகின் ஜாம்பவானாக திகழ்பவர் நடிகர் கவுண்டமணி. ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய், ராமராஜன், கார்த்திக், பிரபு, சத்யராஜ், சிம்பு என தமிழ் திரையுலகின் பல பிரபலங்களுடன் நடித்தவர். இவரது திரையுலகில் மிகப்பெரிய மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்திய சம்பவத்தை கீழே விரிவாக காணலாம்.


கவுண்டமணியின் தொடக்கம்:


கவுண்டமணி முதன்முதலில் நாகேஷின் சர்வர் சுந்தரம் படத்தில் துணை நடிகராக அறிமுகமானார். பாராதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து ஊரைச் சுற்றும் நபராக நடித்திருப்பார். பின்னர், பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், சுவரில்லாத சித்திரங்கள் படங்களில் தொடர்ந்து நடித்து அதன்பின்னரே மற்ற இயக்குனர்கள் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உருவெடுத்தார். 


கிழக்கே போகும் ரயில்:


பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயிலின் படப்பிடிப்பின்போது, இயக்குனர் பாரதிராஜா நடிகர் கவுண்டமணியை அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக, ஒருமுறை பாரதிராஜா மேடையில் பேசியதாவது, அவன் அவன் கஷ்டப்பட்டு எங்கிருந்தோ வருவோம். வாய்ப்பு கிடைத்து சரியாக பிடித்துவிட்டால் உச்சிக்கு போயிடுவோம். வாய்ப்பு கிடைக்காத எவ்வளவோ வைரங்கள், வைடூரியங்கள் கீழே கிடக்கிறது. 


இவங்க ( பாக்யராஜ், கவுண்டமணி உள்ளிட்டோர்) எல்லாம் ஒரு செட்டு என்று எனக்குத் தெரியாது. நாடகக்காரன் மாதிரி முடி எல்லாம் வச்சுருப்பான். ஒரு கொண்டையும் வச்சுகிட்டு, நாடக நடிகன். எல்லாம் ரெகமண்ட் பண்ணி போட்டாச்சு. கிழக்கு போகும் ரயில்ல ஒரு சீன். 


கவுண்டமணியை அடித்த பாரதிராஜா:


அப்போ எல்லாம் பிகினிங்ல பேப்பரே இல்ல. இது முடிஞ்ச உடனே இப்படி போயிட்டு இப்படி வரனும். அவன் டயலாக்கை பிரிக்கனும். மைண்ட்லயே. இங்க கட் பண்ணப்போறேனு யோசிக்கனும். ஏன்னா அது இரண்டாவது படம். பேசும்போது சொன்னதுல ரெண்டு வரி சேத்துட்டான் (கவுண்டமணி). நான் கட் இட் சொன்னேன். ஏன்னா எனக்கு எங்க கட் பண்றதுனு தெரியல. சொந்தமா ரெண்டு லைன் சொல்லிட்டான்.


இவன் (கவுண்டமணி) பின்னால பாக்குறான். நம்மாளு ( பாக்யராஜ்) நான் சொன்னேனு சொல்லாதனு சைகை காட்டுறான். இவன் இடையில சொருகிருக்கான். ஒரு அடி விட்டேன் கவுண்டனை ( கவுண்டமணி) விட்டுட்டு இப்படி திரும்புனேன். ஆர்வம் ஜாஸ்தி. நாலு வரி, 6 வரி எழுதிருக்கு. கூட இரண்டு வரி சேத்துடுது. அது டைரக்டர்கிட்ட சொல்லில செய்யனும். இன்னைக்கு எங்கயோ இருக்காரு. 


இவ்வாறு அவர் பேசினார்.


மேலும், கிழக்கே போகும் ரயிலில் படத்தில் நடிகர் கவுண்டமணிக்கு பதிலாக முதலில் டெல்லி கணேஷை நடிக்க வைக்கவே பாரதிராஜா முடிவு செய்திருந்தார். ஆனால், பாக்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பேசி நடிகர் கவுண்டமணியை நடிக்க வைத்துள்ளனர். அவரை நடிக்க வைப்பதில் பாரதிராஜாவிற்கு விருப்பமில்லாமல் இருந்துள்ளது. ஏனென்றால், நடிகர் கவுண்டமணி நடிக்க வரும்போதே அவருக்கு தலையில் முடி மிகவும் குறைவாகவே இருந்தது. 


பின்னர், அவருக்கு விக் வைத்து அவருக்கு வசனம் சொல்லிக் கொடுத்து பாக்யராஜ் பாரதிராஜா முன்பு நடிக்க வைத்து சம்மதம் வாங்கியுள்ளார். சுதாகர், ராதிகா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவை கிராமங்களை நோக்கி நகர்த்தியதில் பாரதிராஜாவின் பங்கு அளப்பரியது.