தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக திகழ்ந்த பாலாஜி சக்திவேல் இன்று நடிகராகவும் மிளிர்கிறார். அவர் நேர்காணல் ஒன்றில் தான் நடிகரானது பற்றி தெரிவித்துள்ளார். 


இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து விக்ரம் நடித்த ‘சாமுராய்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலாஜி சக்திவேல். காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகிய அவர், அதன்பின் இயக்கிய கல்லூரி, வழக்கு எண் 18/9 உள்ளிட்ட படங்களை இயக்கினார். அசுரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பாலாஜி சக்திவேல் இன்று தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இதனிடையே அவர்நேர்காணல் ஒன்றில் தான் நடிகரான கதையை தெரிவித்துள்ளார். 


பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை


உண்மையை சொல்லப்போனால் எனக்கு நடிக்கிற ஆசையெல்லாம் கிடையாது. விசாரணை படத்திற்காக இயக்குநர் மிஷ்கின் அவரோட அலுவலகத்துல ஒரு பாராட்டு விழா வச்சிருந்தார். அந்த நிகழ்ச்சியில் மணிரத்னம், ஷங்கர், பாலா, எஸ்.பி.ஜனநாதன், மோகன் ராஜா, கௌதம் மேனன், வெற்றி மாறன், லிங்குசாமி,நான் என கிட்டதட்ட 30 இயக்குநர்கள் கலந்து கொண்டார்கள். எல்லோரும் மாடியில நின்னு பேசிட்டு இருக்கும்போது மழை வந்ததால், ஒரு சின்ன ரூமுக்குள் சென்றோம்.


அப்போது நான் ஜாலியா சில விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தேன். காரணம் அப்போது நான் திரைப்படத்துறை மாணவர்கள் எடுக்கும் குரும்படங்களில் நடித்து வந்தேன். என்னை அவர்கள் எப்படியெல்லாம் நடிக்க வைப்பார்கள் என்பதௌ காமெடியா நடித்துக் காட்டிக் கொண்டிருந்தேன். அது எல்லாருக்கும் பிடித்து விட்டது. உடனடியாக வெற்றிமாறன் என்னிடம், ‘உங்களை ரெடி பண்ணுங்க. நடிக்கிற மெட்டீரியல் நீங்க’என சொன்னார். நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து விட்டேன். 


மணிரத்னம் கேட்ட கேள்வி


ஆனால் வெற்றிமாறன் அதை நியாபகம் வைத்துக்கொண்டு அசுரன் படம் எடுக்கும்போது என்னிடம் கேட்டார். முதலில் நான் வேண்டாம் என சொன்னேன். ஆனால் அவர், ‘நான் பார்த்துக்கிறேன். எந்த டென்ஷனும் இருக்காது’ என சொல்லி நடிக்க வச்சிட்டார். இதுதான் சீன்..உங்களுக்கு எப்படி வேணுமோ நடிங்க என சொல்லி விடுவார். ஆனால் அதேசமயம் இயல்பு மாறாமல் நம்மை அந்த காட்சியில் கொண்டு வந்து விடுவார்.


அந்த படம் பார்த்துவிட்டு வெற்றி படத்துல மட்டும் தான் நடிப்பீங்களா? என் படத்துல நடிக்க மாட்டீங்களா? என மணிரத்னம் கேட்டார். நான் அப்படியெல்லாம் இல்லை என சொல்ல, ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்தேன். பின்னர் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்தேன். என்னை பொறுத்தவரை பயிற்சியாளராக மாதிரி இயக்குநராக இருந்த நான் இப்போது ஒரு வீரராக களத்தில் இறங்கி விளையாடும் போது கடினமாகத்தான் இருந்தாலும் ஜாலியா தான் இருக்குது' என பாலாஜி சக்திவேல் தெரிவித்துள்ளார்.