இயக்குனர் பாலா, அதிகம் பேசாதவர். பேச வைப்பவர். ஆனால், அவர் வாய் திறந்து, மனம் திறந்து பேசிய ஒரு நிகழ்ச்சி, தர்மதுரை பட விழா. பாலுமகேந்திராவின் சிஷ்யரான பாலா, சக சிஷ்யனான இயக்குனர் சீனுராமசாமி மற்றும் படத்தின் நாயகன் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் யுவன் பற்றி நிறைய பேசியிருந்தார். இதோ அந்த பேட்டி உங்களுக்காக ரீவைண்ட்!




‛‛விஜய் சேதிபதி படங்கள் அனைத்தையும் பார்த்துள்ளேன். சேதுபதி, நானும் ரவுடி தான் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் அவர் நடிப்பார். எந்த இமேஜ் இல்லாத மிகச் சிறந்த, ஆகச்சிறந்த நடிகன் விஜய் சேதிபதி. அவர் மாதிரியான நடிகர், தமிழ் சினிமாவுக்கு கிடைத்தது பெருமை.


சீனுராமசாமி, பாலுமகேந்திர சிஷ்யர். எனக்கு ஜூனியர். பாலுமகேந்திரா மனைவி என்னிடம் வந்தார்; ‛சீனு ஒரு படம் எடுத்திருக்கான்... போய் பாரு...’ என்றார். அவர் எந்த படத்தையும் பார்க்க கூறமாட்டார். ‛அவன்... என்னமா படம் எடுத்திருக்கப் போறான்... அதைப் போய் பார்க்குறதுக்கு...’ என்று நான் கூறினேன். ‛இல்லை... இல்லை... நீ போய் பாரு.. ’ என்று அவர் அழுத்தினார். 


சரி, போய் பார்க்கலாம் என்று போய் படத்தை பார்த்தேன் அந்த நொடி வரை நான் சீனுராமசாமியை ஒரு முட்டாப்பாயலாக தான் நினைத்திருந்தேன். படம் பார்த்த பின் கிட்டத்தட்ட ஒரு வாரம் என்னை தூங்கவிடாமல் செய்துவிட்டான். ஒரு வாரமாக, விஜய் சேதிபதியை தவிர அந்த படத்தில் நடித்த அனைவரிடமும் பேசினேன். அப்போது எனக்கு விஜய்சேதுபதியை தெரியாது. அந்த அளவிற்கு அந்த படம் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. 




எந்நேரமும் சினிமாவை பற்றியே சிந்திக்கும் ஒரு சினிமா ரசிகன் சீனுராமசாமி. எப்போ பார்த்தாலும் சினிமாவை பற்றி தான் பேசுவான். ‛சரிடா... நாம சினிமாவில் தான் இருக்கோம்... அதை தாண்டி எதையாவது பேசலாமேனு சொன்னா...’ அப்பவும் சினிமாவை தான் பேசுவான். சினிமா சினிமா சினிமானு அறுப்பான். சீனுவை பார்த்தாலே நான் ஓடுவேன். திடீர்னு போன் செய்து, ‛அண்ணே நான் ஒரு படம் பண்ணப்போறேன்னு...’ சொல்வான். சரி பண்ணுனு, நாளைக்கு பேசலாம்னு சொல்வேன். மணியை பார்த்த ராத்திரி 1 மணி இருக்கும். இப்பவே சொல்லனும்னு சொல்வான். 


அவனுக்கு ஒன்னு தோணுச்சுனா... உடனே அதை என்னிடம் சொல்லனும். அவனை மாதிரி ஒரு எமோசனல் சீன் எடுக்க முடியாது. அதுவும் இசையோடு கூடிய எமோசன் சீன். யுவன் சங்கராஜா பின்னணியில் இளையராஜா மாதிரி இருக்குன்னு சொல்றாங்க. யுவனுக்கு மட்டுமல்ல எல்லாருக்குமே இளையராஜாவோட சாயல் இருக்கும். அதை ஒரு பெரிய விசயமா பேசக்கூடாது. பெண்களை கண்ணியமாக சினிமாவில் காட்டுவதில் சீனுராமசாமி கைதேர்ந்தவன்,’’ என அந்த மேடையில் சீனுராமசாமியை இயக்குனர் பாலா புகழ்ந்து பேசியிருந்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண