அவன் இவன் பட வழக்கிலிருந்து நடிகர் ஆர்யாவைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் பாலாவும் விடுவிக்கப்பட்டுள்ளார்.


அவன் இவன் திரைப்படத்தில் சிங்கப்பட்டி ஜமீன் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி அந்த ஜமீனின் வாரிசுகளில் ஒருவர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அதில், சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும் சொரிமுத்து அய்யனார் குறித்தும் அவதூறான கருத்துகளுடன் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.


இந்த வழக்கு அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் ஆர்யாவும் பாலாவும் ஆஜராகவில்லை.




இந்நிலையில், தான் ஆர்யாவுக்கும், பாலாவுக்கும் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்தது. இதனால், ஆர்யாவும், பாலாவும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். கடந்த மார்ச் மாதம் நடிகர் ஆர்யா தரப்பில் படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்கு வருத்தம் தெரிவித்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், இயக்குநர் பாலா விடுவிக்கப்படவில்லை. தொடர்ந்து வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் குற்றத்தை முறையாக நிரூபணம் செய்யவில்லை என்று கூறி இயக்குநர் பாலா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அவன் இவன் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். இதில் ஆர்யா, விஷால் ஆகியோருடன் புதுமுகங்கள் ஜனனி ஐயர் மற்றும் மது ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர்.


இந்தப் படத்தில், வால்ட்டர் வணங்காமுடி என்ற கதாபாத்திரத்தில் விஷால், கும்புடுறேன்சாமியாக ஆர்யா. ஜமீன் தீர்த்தபதியாக ஹைனெஸ் என்று படம் முழுக்க வியாபித்திருக்கும் ஜி.எம்.குமார் நடித்துள்ளனர். கதையின் பின்புலம் என்பது வலுவானதாக இல்லாமல் இருந்த பாலாவின் படம் இது. இந்தப் படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் நிறையவே இருந்தாலும் கூட இறுதிக் காட்சி பாலாவின் ட்ரேட்மார்க் வன்முறையோடு முடியும். பாலாவின் முதல் கமர்ஷியல் படம் என்ற விமர்சனங்களும் இந்தப் படத்துக்கு உண்டு. ஆனால், வசூல் ரீதியாக படம் பெரிய சக்சஸ் இல்லை. 


படத்தில் ஹைனஸ்ஸாக நடித்த  ஜி.எம்.குமார் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அவர், சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்தவராகவும், வாழ்ந்துகெட்ட ஜமீனாகவும் காட்டப்பட்டிருப்பார்.


அவரை ஒட்டிய காட்சிகளில் தான் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும் சொரிமுத்து அய்யனார் குறித்தும் அவதூறான கருத்துகளுடன் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.