இதுவரை ரசிகர்கள் கண்டிராத ஒரு அனுபவமாக அல்லு அர்ஜூடனான தனது படம் இருக்கும் என்றும் இந்த படத்தில் பணியாற்றுவதை ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் மிகுந்த சவாலாக கருதுகிறார்கள் என அட்லீ தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

அட்லீ அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகும் படம்

‘ஜவான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் அட்லீ தற்போது ரூ.800 கோடி மதிப்பில் உருவாகும் மிகப்பெரிய சைன்ஸ் ஃபிக்‌ஷன் படத்தை இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், அல்லு அர்ஜூன் மற்றும் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படம் சர்வதேச தரத்தில் உருவாகும் வகையில் பல ஹாலிவுட் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுகின்றன. ஹாலிவுட் பிரபல Lola VFX நிறுவனம் படத்தின் வி.எஃப்.எக்ஸ் பணிகளை மேற்கொள்கிறது. அதேபோல், Spectral Motion என்கிற முன்னணி நிறுவனம் வித்தியாசமான உயிரினங்களின் தோற்றங்களை வடிவமைக்கிறது — இதே நிறுவனம் Hellboy உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களின் கதாபாத்திரங்களுக்கும் வடிவம் கொடுத்துள்ளது.

Continues below advertisement

மேலும் Fracture FX, ILM Technoprops, Legacy Effects போன்ற முன்னணி விஷுவல் எஃபக்ட்ஸ் நிறுவனங்களும் இந்த திட்டத்தில் இணைகின்றன. Captain America, Spider-Man, Iron Man, Avengers போன்ற உலகப் புகழ்பெற்ற சூப்பர்ஹீரோ படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அட்லீயின் கதையை கேட்டவுடனே அதனைப் பாராட்டியதாக கூறப்படுகிறது.

இதுவரை கண்டிராத அனுபவமாக இருக்கும் 

அண்மையில் தனது படத்தைப் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை அட்லீ பகிர்ந்துகொண்டார் " படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்று வருகிறது. எங்கள் குழு புதிய யோசனைகளை ஆராய்ந்து, பார்வையாளர்களுக்கு இதுவரை காணாத அனுபவத்தையும், தனித்துவமான காட்சியமைப்பையும் வழங்கும் வகையில் பெரிய அளவில் ஒன்றை உருவாக்க முயற்சி செய்கிறது,” என அவர் கூறினார்.

மேலும் “பார்வையாளர்கள் உண்மையில் மிக இனிமையானவர்கள். அவர்கள் எப்போதும் என்னை மேலும் முயற்சி செய்யத் தூண்டுகிறார்கள். நான் ராஜாராணி செய்தபோது அது ஒரு காதல் கதை. அதற்குப் பிறகு அவர்கள் ‘இன்னும் பெரிய ஒன்றைச் செய்ய வேண்டும்’ என்று எதிர்பார்த்தார்கள். பார்வையாளர்கள் தரும் அன்பு அவர்களிடமிருந்து சில எதிர்பார்ப்புகளை உருவாக்குகிறது. அதனால் இதை ஒரு அபாயமாக நான் பார்க்கவில்லை. உண்மையில் நான் இந்தச் செயல்முறையை மிகவும் ரசிக்கிறேன். மிகவும் புதிதாகவும், சுவாரஸ்யமாகவும், பார்ப்பவர்களை ஈர்க்கக்கூடிய வகையிலும் ஒன்றை உருவாக்க முயற்சி செய்கிறோம். இன்னும் சில மாதங்கள் காத்திருக்கவும் நாங்கள் உங்களுக்காக ஒரு சிறந்த படைப்பை  உருவாக்கி வருகிறோம்.

ஒரு விஷயம் உறுதியாகச் சொல்லலாம்  இதுவரை காணாத ஒன்றை உருவாக்குகிறோம். பல ஹாலிவுட் நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்தில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களே இதை மிகவும் சவாலான திட்டமாகக் கூறுகிறார்கள். அதுவே நாங்கள் உண்மையில் மிகப் பெரிய ஒன்றை உருவாக்குகிறோம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.” என அட்லீ கூறியுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்க செய்துள்ளது