ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்ட


ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் கடந்த ஜூலை 12 முதல் 14 வரை கோலாகலமாக மும்பையில் நடைபெற்றது. இந்த திருமணம் அம்பானியின் குடும்பத்திற்கு சொந்தமான ஜியோ வர்த்தக மையத்தில் மிக பிரம்மாண்டமான செட் அமைக்கப் பட்டு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாப் பாடகர் ஜஸ்டின் பீபர், ஹாலிவுட் மாடல் கிம் கார்தர்ஷியன், ஜான் சீனா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்திய திரையுலக பிரபலங்கள் அமிதாப் பச்சன் , ரஜினிகாந்த் , ரன்வீர் சிங் , விக்கி கெளஷல், தீபிகா படுகோன், ரன்பீர் கபூர் ஆலியா பட், ஷாருக் கான், சல்மான் கான், ஜான்வி கபூர், ஏ.ஆர் ரஹ்மான் என இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள்.


மூன்று நாட்கள் நடந்த இந்த திருமண கொண்டாட்டத்திற்கு அம்பானி குடும்பத்தினர் சுமார் 5 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு மட்டும் 9000 விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். பாராத் எனப்படும் மணப்பெண் வீட்டிற்கு மணமகன் செல்லும் ஊர்வலம் மட்டுமே 8 மணி நேரம் நடைபெற்றது. அரண்மனைப் போல் அலங்காரங்கள், ஆயிரக் கணக்கான உணவு வகைகள் என வரலாற்றிலேயே இப்படியான ஒரு திருமணம் நடந்தது இல்லை என கூறப்படுகிறது. 


அட்லீ இயக்கிய குறும்படம்






ஆனந்த் ராதிகா திருமணத்தில் இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் அட்லீ ஒரு விருந்தினராக மட்டும் செல்லவில்லை, மாறாக யாரும் அளிக்காத ஒரு அரிய பரிசை திருமண தம்பதிகளுக்கு அளித்துள்ளார். ஜூலை 12 ஆம் தேதி திருமணத்திற்கு முன்னதாக ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் போல் அனிமேஷ் செய்யப் பட்ட ஒரு குட்டி அனிமேஷன் திரைப்படம் திரையிடப் பட்டது. இந்த 10 நிமிட குறும்படத்தை எடுத்தவர் அட்லீ. 


பாலிவுட்டில் கடந்த ஆண்டு ஜவான் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்த அட்லீ, அம்பானி திருமணத்திற்கு குறும்படம் எடுக்கும் அளவு உயர்ந்துள்ளது அவர் ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.