தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நூடுல்ஸ் திரைப்படம் வெளியாகும் தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது. 


பொதுவாக சினிமாவை பொறுத்தவரை எப்போது என்ன நடக்கும் என்பது ரசிகர்களால் கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். அதாவது பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் மக்களை கவரும் நினைத்தால் எதிராக நடக்கும். அதேசமயம் பெரிய எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகும் படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும். அதுமட்டுமல்லாமல் ஓடிடி தளங்களின் வருகையால் சிறிய பட்ஜெட் படங்கள் கூட எளிதாக மக்களை சென்றடைகிறது. 


இதற்கு உதாரணமாக இந்தாண்டு வெளியான அயோத்தி, டாடா, போர்தொழில், குட்நைட் உள்ளிட்ட படங்களை குறிப்பிடலாம். இப்படியான நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நூடுல்ஸ் திரைப்படம் வெளியாகும் தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது. ஷீலா ராஜ்குமார், ஹரிஷ் உத்தமன், ஆழியா, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அருவி, அயலி, மாவீரன் படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான மதன் இயக்கியுள்ளார். 


ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில்  தம்பி அருண் பிரகாஷ் தயாரித்திருக்கும் நூடுல்ஸ் படத்தை  வி ஹவுஸ் புரொடக்ஷன்  சார்பில் சுரேஷ் காமாட்சி வெளியிட உள்ளார். இந்த படம் செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நூடுல்ஸ் படம் பற்றி இயக்குநர் மதன்  தெரிவிக்கும் போது, ‘நமது வாழ்க்கையை 2 நிமிடங்களில் மாற்றக்கூடிய சம்பவங்கள் பலருக்கும் நடைபெற்று உள்ளது. இரண்டு நிமிடங்களில் பரிமாறக் கூடிய உணவைப் போல  படத்தின் ஹீரோ 2 நிமிடத்தில் எடுக்கும் முடிவு எப்படி அவரது வாழ்க்கையை மாற்றுகிறது என்பது கதையாக அமைக்கப்பட்டுள்ளது’ என கூறினார். 


தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நூடுல்ஸ் படம் பற்றி பேசும் போது, ‘நிறைய நண்பர்கள் மாநாடு படத்திற்குப் பிறகு நீங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே கவனம் செலுத்தலாமே? என கேட்டார்கள். சிலருக்கு சினிமா மோகம். சிலருக்கு சினிமா தாகம். அந்த வகையில் எனக்கு  கொஞ்சம் தாகம் அதிகம். முரண்களைப் பார்த்தே வளர்ந்துவிட்டதால் முரண்களில் பயணப்படுவது பிடிக்கும். ஏழு கடல் ஏழு மலை, ராஜாகிளி, உயிர் தமிழுக்கு,  வணங்கான் என பெரிய படங்களுக்கு நடுவே நூடுல்ஸ் என்ற சமூக பொறுப்புள்ள ஒரு படத்தின் மீதும் கவனம் சென்றது. 


இப்படம் தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.  நிச்சயம் பார்ப்பவர்களை ஏமாற்றாது என்ற நம்பிக்கை வந்த பிறகே படத்தின் மீது கைவைத்தேன்” என தெரிவித்துள்ளார்.