தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட் பிரபலம் சல்மான் கானுடன் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவின் முருகதாஸ்


கடந்த 2001 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் அஜித் நடித்த தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் அவருக்கு மிகப்பெரிய இடத்தை தமிழ் சினிமாவில் உறுதி செய்தது. சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித்தை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியதில் தீனா படத்துக்கு முக்கிய பங்குண்டு. இதனைத் தொடர்ந்து விஜயகாந்தை வைத்து “ரமணா” படத்தை இயக்கினார். இப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 






பின்னர் சூர்யாவை வைத்து கஜினி, ஏழாம் அறிவு, விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கினார். மேலும் நடிகர் ரஜினிகாந்தை வைத்து தர்பார் என்ற படம் எடுத்தார். தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் என்ற படத்தை இயக்கினார். அதேபோல் ஸ்டாலின் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். 


இந்தியில் கிடைத்த வெற்றி 


2005 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து தான் இயக்கிய கஜினி படத்தை 2008 ஆம் ஆண்டு இந்தியில் ரீமேக் செய்தார் முருகதாஸ். இந்த படத்தில் ஹீரோவாக ஆமீர்கானும், ஹீரோயினாக அசினும் நடித்தனர். இந்த படம் மிகப்பெரிய அளவில் இந்தியில் வெற்றி பெற்றது. ஒரே படத்தால் ஓவர் நைட்டில் பாலிவுட்டில் கொடி நாட்டினார் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பிறகு விஜய் நடித்த துப்பாக்கி படத்தை இந்தியில் அக்‌ஷய்குமாரை வைத்து ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்ய இதுவும் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. அதன்பின்னர் பாலிவுட் பக்கம் செல்லாத ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மீண்டும் சல்மான் கானை வைத்து படம் இயக்குகிறார். இந்த புதிய படம் 2025 ஆம் ஆண்டு ரம்ஜான் அல்லது பக்ரீத் பண்டிகைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சிவகார்த்திகேயன் படம் நிலை?


இதனிடையே தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் 4 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்குகிறார். இப்படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயனும், ஹீரோயினாக ருக்மணி வசந்தும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.  இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 3 வாரங்களுக்கு முன் தான் தொடங்கியது. இப்போது சல்மான் கானை இயக்கப்போவதாக முருகதாஸ் அறிவித்திருப்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி சிவகார்த்திகேயன் படம் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.