மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை இயக்குநர் அனுராக் கஷ்யப் புகழ்ந்துள்ளார்.


மஞ்சும்மல் பாய்ஸ்


சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ் . பிரேமம் படத்தைத் தொடர்ந்து பெரும் திரளாக தமிழ் சினிமா ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக கொண்டாடும் படமாக மாறியுள்ளது மஞ்சும்மல் பாய்ஸ். இப்படத்திற்கு தமிழர்கள் மத்தியில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததற்கு காரணம் கமல்ஹாசனின் குணா படம். உலக நாயகன் கமல்ஹாசனைத் தொடர்ந்து விக்ரம், கார்த்திக் சுப்பராஜ், தனுஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தமிழ் திரையுலகப் பிரபலங்கள் இப்படத்தைப் பாராட்டியுள்ளார்கள். 


100 கோடி வசூல்


ஐந்து கோடி செலவில் எடுக்கப் பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் படம் இதுவரை 100 கோடிகளுக்கும் மேலாக வசூல் செய்துள்ளது.  இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் தமிழ் ரசிகர்களுக்கு நன்று தெரிவித்தார் படத்தின் இயக்குநர் சிதம்பரம் . 


படத்தை பாராட்டிய வெங்கட் பிரபு






கடந்த சில மாதங்களாக தமிழில் வெளியான படங்கள் பெரியளவில் வெற்றிபெறாத நிலையில் மலையாளப் படங்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. விஜயின் கோட் படத்தை இயக்கிவரும் இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்தில் இப்படத்தைப் பாராட்டி பேசியிருந்தார்.


இளைஞர்களை மட்டுமே மையமாக வைத்து வெங்கட் பிரபு இயக்கிய  சென்னை 28 படம் தமிழ் சினிமாவில் புதிய ட்ரெண்டை உருவாக்கிய படம். ” ஒரு படத்தில் கதாநாயகியே இல்லாமல் வெறும் ஒரு நண்பர்கள் குழுவை மட்டுமே வைத்து எடுக்கப் பட்டிருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை மக்கள் கொண்டாடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது“ என்று வெங்கட் பிரபு  குறிப்பிட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது இந்தி பட இயக்குநர் அனுராக் கஷ்யப் தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் படத்தைப் பாராட்டியுள்ளார்.


இந்தி சினிமாவில் இப்படி எல்லாம் எடுக்க முடியாது!




 மஞ்சும்மல் பாய்ஸ் படத்தைப் பற்றி லெட்டர் பாக்ஸ் தளத்தில் இயக்குநர் அனுராக் கஷ்யப் பதிவிட்டுள்ளார். இதில் அவர் “ இந்தியாவில் வெளியாகும் மற்ற வெகுஜன சினிமாக்களைக் காட்டிலும் சிறந்த படம் மஞ்சும்மல் பாய்ஸ். அப்படி ஒரு  அசாத்தியான  கதைசொல்லல், துணிச்சல். எப்படி இந்த மாதிரியான ஒரு கதையை தயாரிப்பளரிடம் சொல்லி சம்மதிக்க வைத்தார்கள் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தி சினிமாவில் இந்த மாதிரியான படங்களை ரீமேக் தான் செய்வார்கள். மலையாளத்தில் அடுத்தடுத்து மூன்று அற்புதமான படங்களை கொடுத்திருக்கும் மலையாள சினிமாவோடு ஒப்பிடுகையில் இந்தி சினிமா ரொம்ப பின் தங்கி இருக்கிறது.” என்று அவர் கூறியுள்ளார்