தமிழ் திரையுலகின் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் உலா வருபவர் பார்த்திபன். இவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் திரைப்பட விமர்சகர்கள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு என்ன தெரியும்?
யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் பார்த்திபன் கூறியதாவது, "திரைப்பட விமர்சகர்கள் பற்றி நான் மிகவும் யோசிக்கிறேன். இவர்கள் எந்த கோணத்தில் படத்தை விமர்சிக்கிறார்கள். இவர்களுக்கு என்ன சினிமா தெரிகிறது? அது எனக்கு புரியவில்லை.
ஒரு கிராமத்தில் இருந்து கிளம்பி வந்துள்ளோம். நம் பார்வையில் ஒரு சினிமா இருக்கும். இவர்களில் நிறைய பேர் சினிமாவின் உள்ளே வந்து ஜெயிக்க வேண்டும் என நினைத்து முடியாமல் போனவர்கள். அதன்பின்பு ஒரு கேமராவை தூக்கி வைத்து பேசுபவர்களாக உள்ளனர். அவர்களுக்கு சினிமாவில் என்ன தெரிகிறது?
நான் சொல்வது படத்தில் நிறை, குறையைப் பற்றி அல்ல. அனைத்து படத்தையும் கஷ்டப்பட்டுதான் எடுக்கிறார்கள். அனைத்து படத்தையும் பாராட்டிவிட வேண்டும் என்று அல்ல. ஒரு குறிப்பிட்ட விமர்சனத்தில் 13 குழந்தைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று கூறியுள்ளார் ஒருவர். எவ்வளவு மனசு கஷ்டமாக இருக்கிறது. அதில் ஐயங்கார் கதாபாத்திரம் தனி. சாரா கதாபாத்திரம் தனி. “
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
விமர்சகர்கள் மீதான குற்றச்சாட்டு:
இணையதள வளர்ச்சிக்கு பிறகு திரைப்பட விமர்சகர்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளனர். இவர்களில் திரைப்பட விமர்சனம் என்ற பெயரில் சில விமர்சகர்கள் நடிகர்களின் தனிப்பட்ட உருவம் உள்ளிட்டவற்றை விமர்சிக்கின்றனர். சில விமர்சகர்கள் படங்களை நல்ல முறையில் விமர்சிக்க தயாரிப்பாளர்களிடம் மிகப்பெரிய அளவில் பணம் கேட்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது மட்டுமின்றி சில விமர்சகர்கள் சில நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியும் வருவதற்கும் தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இதுபோன்ற விமர்சனங்களால் திரையரங்கிற்கு படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் பல வெற்றிப்படங்களை தந்துள்ள பார்த்திபன், சமீபத்தில் சில வித்தியாசமான முயற்சியாக சில திரைப்படங்களை இயக்கி வருகிறார். ஒத்த செருப்பு, இரவின் நிழல் போன்ற வித்தியாசமான முயற்சிக்கு பிறகு அவர் டீன்ஸ் படத்தை இயக்கினார். 13 குழந்தைகளை மையமாக வைத்து இந்த டீன்ஸ் படம் உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.