2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படத்தின் சென்சார் சர்ட்டிபிகேட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படம் அன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் ஒன்று. இந்த படம் 16 ஆண்டுகளுக்குப் பின் மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியது. இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த நடிகர் கார்த்தி இந்த படத்தின் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் இப்படத்துக்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது.
மேலும் இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் திருப்புமுனை தந்த படம் என பல பெருமைகளை கொண்டது பருத்திவீரன் படம். இப்படிப்பட்ட படம் சர்ச்சையில் சிக்கியிருப்பது திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பருத்திவீரன் படத்தால் தனக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக அமீரும், ஞானவேல்ராஜாவும் மாறி மாறி குற்றம் சாட்டினர். இதில் ஒருபடிமேலே போய் அமீரை, திருடன் என ஞானவேல் ராஜா விமர்சித்தார்.
இதனால் சர்ச்சை ஏற்பட்டு திரையுலக பிரபலங்களான சசிகுமார், பொன்வண்ணன், சமுத்திரகனி, சுதா கொங்காரா, கவிஞர் சினேகன், கரு.பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் கடுமையான கண்டனம் தெரிவித்தனர். இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகிய 3 பேரும் பேசாமல் இருப்பதும் பற்றியும் விமர்சிக்கப்பட்டது. பிரச்சினை பெரிதான நிலையில் அமீரைப் பற்றிய தன்னுடைய பேச்சுக்கு ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்தார்.
ஆனால் வருத்தம் தெரிவித்திருக்க கூடாது. எந்த பொதுவெளியில் அவரை தரக்குறைவாக விமர்சித்தீர்களோ அதே இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என சசிகுமார், சமுத்திரகனி ஆகிய இருவரும் கொந்தளித்தனர். இதனிடையே நேற்று நடிகர், இயக்குநர் சேரன் வெளியிட்ட பதிவில், “”@StudioGreen2, #Gnanavelraja படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள் அமீரின் நேர்மையையும், உண்மையும், நாணயமும் நான் நன்கறிந்தவன் என்ற முறையில் நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் பொய்யானது. கண்டிக்கிறேன் உங்களை. கார்த்தியும் சூர்யாவும் உங்களை இந்நேரம் உம் தவறை கண்டித்திருக்க வேண்டும். உண்மையும் சத்தியமும் வெல்லும். காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும்” என தெரிவித்திருந்தார்.
இப்படியான நிலையில், பருத்திவீரன் படத்தின் சென்சார் சர்ட்டிபிகேட் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் கீழே படத்தின் தயாரிப்பாளர் என்ற இடத்தில் “அமீர்” பெயர் தான் இடம் பெற்றுள்ளது. ஆக பருத்திவீரன் தயாரிப்பாளர் அமீர் தான் என்பது உறுதியாகி விட்டதா, இதற்கு ஞானவேல்ராஜா என்ன பதில் சொல்லப் போகிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.