சமீபத்தில் நடிகர்கள் கருணாஸ், அருண் பாண்டியன் ஆகியோர் நடிப்பில் வெளிவரவுள்ள `ஆதார்’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் அருண் பாண்டியன், இயக்குநர் அமீர் ஆகியோர் மேடையிலேயே கருத்து மோதலில் ஈடுபட்டுக் கொண்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் அருண் பாண்டியன் பேசும் போது, `தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பது, இயக்குநர் பாரதிராஜா படம் இயக்கிய காலம்… நாங்கள் நடித்த காலம்.. தற்போது எல்லாம் மாறிவிட்டது. தமிழ் சினிமா எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என குறிப்பிட வேண்டுமென்றால், இன்று தமிழகத்தில் பிற மொழித் திரைப்படங்கள் தான் அதிக வசூலை குவிக்கின்றன. சமீபத்தில் அஜித், விஜய் ஆகிய இரண்டு நடிகர்களின் திரைப்படங்களிலும் அதிகமான பணத்தைப் படத்திற்காக செலவழிக்கவில்லை. இந்த நடிகர்கள் தங்களுடைய சம்பளமாக பெரும்பாலான பணத்தை பெற்றுக் கொண்டனர். தயாரிப்பு செலவின் 90 சதவீதத்தை ஊதியமாக கேட்டால் எப்படி நல்ல படத்தை உருவாக்க முடியும்? இந்த மேடையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, இந்தப் போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன்’ எனக் கூறினார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு பேசிய இயக்குநர் அமீர், `தமிழ் சினிமா மீதான தன்னுடைய கோபத்தையும், நடிகர்களின் சம்பளம் பற்றிய தன்னுடைய ஆதங்கத்தையும் இந்த மேடையில் அருண் பாண்டியன் வெளிப்படுத்தியிருந்தார். இது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். ஆனால் அவர் தமிழ் சினிமா எல்லா வகைகளிலும் பின் தங்கியிருக்கிறது எனக் கூறியதை நான் ஏற்க மறுக்கிறேன். இந்தியாவிற்கே முன்னோடி தமிழ் சினிமாதான். ஒருநாளும் தமிழ் சினிமா பின் நோக்கி போகாது. ஒரு 'ஆர் ஆர் ஆர்', ஒரு 'கே ஜி எஃப்' ஆகியவற்றை வைத்து தமிழ் சினிமாவை எடை போடாதீர்கள். ஏனென்றால் நாம் அந்தக் காலத்திலேயே 'சந்திரலேகா' என்ற பிரமாண்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.
'ஆயிரத்தில் ஒருவன்', 'நாடோடி மன்னன்', 'உலகம் சுற்றும் வாலிபன்' போன்ற படைப்புகளுக்கு நிகராகவோ, சமூக படைப்புகளுக்கு இணையாகவோ எளிமையான படைப்புகளுக்கோ இணையே இல்லை. எனவே என்னால் `தமிழ் சினிமா பின் தங்கி விட்டது’ எனக் கூறுவதை ஏற்கவே முடியவில்லை. தமிழ் சினிமா எப்போதுமே முன்னோடியாகத் தான் இருந்திருக்கிறது’ என்றார்.
தொடர்ந்து அவர், `ஒவ்வொரு காலகட்டத்திலும் வணிக ரீதியிலான சினிமாவாக திரைப்படங்கள் மாறும்போது மாற்றங்கள் ஏற்படும். '16 வயதினிலே', 'கிழக்கு சீமையிலே' ஆகிய படங்கள் வெளியான போதும், வணிக சினிமா இருந்திருக்கிறது. ஆனால் அவை ஒருபோதும் இந்தத் திரைப்படங்கள் வெளியாவதற்கு தடையாக இருந்ததில்லை என்பதை கவனிக்க வேண்டும்’ எனக் கூறினார்.
மேலும், இயக்குநர் அமீர், `தமிழ் சினிமாவில் பணியாற்றிய பெரும் கலைஞர்கள் தான் இன்று மற்ற மொழிப் படங்களில் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். இப்போது நாம் பேசும் இதே இயக்குநர் ராஜமெளலியே, `ஆர் ஆர் ஆர்’ படத்தின் விளம்பர நிகழ்வில், `தமிழ் சினிமா எங்கள் தாய்வீடு’ என்று சொல்லியிருக்கிறார்.. `நாங்கள் தமிழ் சினிமாவைப் பார்த்து பிரமிக்கிறோம். இங்கு கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது’ என்றும் சொன்னார். அதனால் ஒரு சில திரைப்படங்களின் வெற்றியை முன்வைத்து, தமிழ் சினிமாவை எடைபோட்டுவிட வேண்டாம். தமிழ் சினிமா என்றும் தலை நிமிர்ந்து நிற்கும்’ எனக் கூறி முடித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.