லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா, விவேக் பிரசன்னா என பலரும் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பிப்ரவரி 9 ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் நேற்று படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றது. அதேபோல் நேற்று லால் சலாம் படத்தின் செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது. 



அதில் பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “லால் சலாம் படத்தின் கதை என்னவென்று பார்த்தால் ஒரு ஊரில் தேர் திருவிழாவை முன்னிட்டு நடக்கும் கிரிக்கெட் விளையாட்டில் பிரச்சினை வெடிக்கிறது. இதனால் என்ன நடக்கிறது என்பதே காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணு ரங்கசாமி தான் இந்த படத்தின் கதையை சொன்னார். ஒளிப்பதிவாளரும் லால் சலாமுக்கு அவர் தான். இப்படம் ஒரு சின்ன அரசியல் பேசுது. அது மக்கள் சார்ந்த, மக்களுக்குள் இருக்கும் அரசியலை பேசுகிறது. 


அரசியல் இல்லாமல் எந்த நாடும் இயங்காது. என்னை பொறுத்தவரை ஆதார் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலின் ஒரு பங்கு என்பது உள்ளது. அரசியல் என்பது எல்லாவற்றிலும் இருக்கு. அதை பார்க்கும் விதத்தில் தான் வித்தியாசம் உள்ளது. அதைத்தான் நான் லால் சலாம் படத்தின் மூலமாக பேசியுள்ளேன். 


அதேபோல் அப்பா பத்தி நிறைய பேசியாச்சு.அதனால் அதிகம் பேசவில்லை. ஆனால் ஒரு விஷயம் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். விமான நிலையத்தில் அப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் பேசியது பற்றி கேட்டுள்ளார்கள். உண்மையில் நான் என்ன பேசுவேன் என்று அன்றைக்கு அப்பாவுக்கே தெரியாது. அது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. நான் நிறைய பேசமாட்டேன் என்கிற தைரியத்தில் அப்பா வந்து உட்கார்ந்தாரு. 


ஆனால் நான் பேசியதை லால் சலாம் படத்தின் ப்ரோமோஷனா என அப்பாவிடம் கேட்டார்கள். அதற்கு விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். என்னுடைய பேச்சை வைத்தோ அல்லது படத்தில் அரசியல் பேசியோ, அவர் நம்பாத விஷயத்தை பற்றி பேசியோ சூப்பர் ஸ்டார் படம் ஓட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்த ஒரு அரசியலும் பேசாத அவரின் ஜெயிலர் படம் ஓடியதா இல்லையா என்பது எல்லாருக்கும் தெரியும். எங்க அப்பா அவரோட இரண்டு பொண்ணுங்களோட கருத்து சுதந்திரத்தை மதிக்கும் மனிதர். அவரிடம் அந்த மாதிரி கேள்வி கேட்ட விஷயம் கஷ்டமாக இருந்துச்சு என்னிடம் அதை கேட்டிருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.