டூரிஸ்ட் பேமிலி படத்துக்குப் பின் இயக்குநராக தொடரலாம் என நினைத்த நிலையில் நடிகராக மாறியது எப்படி என இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் விளக்கமளித்துள்ளார்.
2025ம் ஆண்டு சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் “டூரிஸ்ட் பேமிலி”. இந்த படத்தை அபிஷன் ஜீவிந்த் இயக்கியதோடு மட்டுமல்லாமல் அப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், “வித் லவ்” படம் மூலம் நடிகராகியிருக்கிறார். இந்த படத்தை மதன் இயக்க, ஹீரோயினாக மலையாள பிரபலம் அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார். இப்படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகவுள்ளது.
வித் லவ் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவிந்த், “இந்த படத்தின் இயக்குநர் ஏற்கனவே நான் இயக்கிய டூரிஸ்ட் பேமிலி படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர் தான். அப்படம் ஷூட்டிங்கில் இருந்தபோது வித் லவ் படத்தின் கதையை என்னிடம் சொன்னார். டூரிஸ்ட் பேமிலி படம் அப்போது வெளியாகவில்லை. இருந்தாலும் என்னிடம் இப்படி ஒரு கதை இருக்கிறது. நீங்கள் படித்து பாருங்கள், உங்களுக்கு பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசலாம் என சொன்னார். நான் அதைப் படித்தது ரொம்ப ஸ்பெஷலாக இருந்தது. அதில் லவ், காமெடி, எமோஷன் என எல்லாமே இருந்தது.
அதன்பின் ஒரு பார்வையாளனாக அந்த படத்தின் கதை கேட்டு ரொம்ப என்ஜாய் பண்ணேன். உடனே பண்ணலாம் என சொன்னேன். அதேசமயம் ஷூட்டிங்கிலும் சரி, கதை சொல்லும்போது ஒரு இயக்குநராக கதையில் தலையிடல் என்பது எட்டிப்பார்க்கும். நான் என்னுடைய பரிந்துரையை சொல்வேன். அதை வேண்டும், வேண்டாம் என முடிவெடுப்பது இயக்குநர் தான்.
இந்த படத்துக்கு நிறைய டைட்டில் யோசித்தோம். ஆனால் படம் பார்த்த பிறகு ஒரு காதல் கடிதம் போல இருந்தது. அதை வித் லவ் உடன் உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம் என்பதை கொண்டு தான் டைட்டில் தேர்வானது. நான் டூரிஸ்ட் பேமிலிக்கு பிறகு ஒரு கதை எழுதினேன். ஆனால் அந்த படம் பார்த்த சௌந்தர்யா ரஜினிகாந்த், அபிஷன் நீங்க நடிக்கணும் என சொன்னார்கள். இயக்குநர் கூட என்னிடம் அதை சொன்னார். நான் ஒரு 4,5 படங்கள் இயக்கி விட்டு பின்னால் நடிக்கலாம் என திட்டமிட்டிருந்தேன்.
மேலும் டீசர் பார்த்த பிறகு கீழே கமெண்டில் பிரதீப் ரங்கநாதனை ஒப்பிட்டு கமெண்ட் பதிவிட்டிருந்தார்கள். அவரும் முதல் படம் இயக்கி விட்டு இரண்டாவது படம் நடிகரானார். இதுபோன்ற சில விஷயம் ஒத்துப்போவதால் அப்படி சொல்கிறார்கள் என நினைக்கிறேன். படம் பார்க்கும்போது அந்த எண்ணம் மறைந்து விடும் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.