மதராஸி

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ருக்மினி வசந்த் , வித்யுத் ஜம்வால், பிஜூ மேனன் , விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். மதராஸி படத்தின் ப்ரோமோஷனின் போது அஜித்தின் தீனா படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவலை இயக்குநர் முருகதாஸ் பகிர்ந்துகொண்டார்

மருத்துவமனையில் இருந்த அஜித்

" சிட்டிசன் படத்தின் போது அஜித் சாருக்கு 60 நாட்கள் இடைவேளை இருந்தது. அந்த இடைவெளையில் ஒரு படத்திற்காக தான் அஜித் சார் என்னை ஒரு தயாரிப்பாளரிடம் அறிமுகம் செய்தார். அப்படி உருவானது தான் தீனா.  தீனா படம் வெளியானபோது அறுவை சிகிச்சைக்காக அஜித் தேனாம்பேட்டை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து அவர் கண் திறந்தபோது படம் பெரிய ஹிட் என்று அவரிடம் சொன்னேன். நான் அவரை சமாதானப்படுத்த சொல்கிறேன் என அஜித் நான் சொன்னதை நம்பவில்லை. அதன்பின் திரையரங்க உரிமையாளர் ஒருவர் சொன்னபிறகே அஜித் நம்பினார். ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பதாக சொன்னார். 

தல பட்டம் வேண்டாம் என்று சொன்னது சரியா ?

முருகதாஸ் இயக்குநராக அறிமுகமான படம் தீனா. இப்படத்திற்கு பின்பே அஜித்திற்கு தல என்கிற பட்டம் ரசிகர்களிடையே பிரபலமானது. சமீபத்தில் தல என்கிற பட்டம் தனக்கு வேண்டாம் என கூறி அஜித் தனது ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இது குறித்து முருகதாஸ் பேசியபோது இப்படி கூறினார் " அது அவருடைய பக்குவத்தை தான் காட்டுகிறது. ரசிகர்கள் தன்னை ஒரு நடிகனாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். திரையரங்கத்தை விட்டு வெளியே வரும்போது ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்றுதான் அவர் எப்போதும் வலியுறுத்தி வருகிறார். ரசிகர்களுக்கு தன்மீது மிதமிஞ்சிய பாசம் வரும்போது அவர் ரசிகர்களை தனது குடும்பங்களை பார்க்க சொல்கிறார். அஜித் சார் ரொம்ப மெச்சூரான ஒரு நபர். ரொம்ப தெளிவாக இருப்பார் "