செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் மதராஸி

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் வெற்றிபெற்றது. மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி உருவான இப்படத்தில் ஒரு முழு ஆக்‌ஷன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்து மக்களிடம் வரவேற்பைப் பெற்றார். வசூல் ரீதியாக அமரன் திரைப்படம் உலகளவில் ரூ 328 கோடி வசூல் செய்தது. இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயனின் மார்கெட் பல மடங்கு பெரிதாகியுள்ளது. அடுத்தபடியாக செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கும் மதராஸி படத்திற்கு ரசிகர்களிடையே பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது

ஷாருக் கானுக்கு சொன்ன கதையில் சிவகார்த்திகேயன் 

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள படம் மதராஸி. சிவகார்த்திகேயன் , ருக்மினி வசந்த் , வித்யுத் ஜம்வால் , பிஜூ மேனன் , விக்ராந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். தீனா , கஜினி ,  துப்பாக்கி , கத்தி என பக்கா ஆக்‌ஷன் ஹிட் படங்களை கொடுத்த முருகதாஸ் மதராஸி படத்தில் மீண்டும் ஆக்‌ஷனுக்கு திரும்பியிருக்கிறார். சிவகார்த்திகேயனின் கரியரை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் படமாக மதராஸி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. மதராஸி பற்றி பேசுகையில் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த கதாபாத்திரத்தை ஷாருக் கானுக்கு சொன்னதாக முருகதாஸ் தெரிவித்துள்ளார்

" 7-8 ஆண்டுகளுக்கு முன் மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த கதாபாத்திரத்தைப் பற்றிய ஒரு ஐடியாவை ஷாருக் கானிடம் சொன்னேன். ஷாருக் கானுக்கு ஐடியா பிடித்திருந்தது. ஆனால் அதன் பின் அவரை தொடர்புகொள்வது கடினமாக இருந்தது. இந்தியில் கஜினி மாதியான ஒரு பெரிய ஹிட் கொடுத்தும் நாம் ஒரு நடிகரை சந்திக்க கஷடப்படுவது எனக்கு பிடிக்கவில்லை. அதனால் அதன் பின் அவரை தொடர்புகொள்ள நான் முயற்சிக்கவில்லை. அதன் பின் சிவகார்த்திகேயனின் உடலமைப்பு அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்கும் என நினைத்தேன். கதையில் நிறைய மாற்றங்களை செய்து உருவானது தான் மதராஸி" என அவர் கூறியுள்ளார்