வாரிசு பட தயாரிப்பாளர்


வாரிசு பட வெளியீட்டின் போது கோலிவுட்டின் நம்பர் 1 நடிகர் விஜய் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயமானவர் தயாரிப்பாளர் தில் ராஜூ (Dil Raju). இவர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மீடியாக்களை எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




கோலிவுட்டில் ஆண்டுதோறும் பொங்கல் ரிலீஸ் படங்கள் வெளியாகும் அதே நேரத்தில், டோலிவுட்டிலும் ஆண்டுதோறும் சங்கராந்தி ரிலீஸ் படங்கள் படையெடுத்து வருகின்றன.


குண்டூர் காரம் Vs ஹனுமன்


அந்த வகையில், டோலிவுட்டில் இந்த ஆண்டு சங்கராந்தி ரிலீஸ் படங்களாக மகேஷ் பாபுவின் ‘குண்டூர் காரம்’ மற்றும் ‘ஹனுமன்’ ஆகிய திரைப்படங்கள் போட்டியிடுகின்றன. 


இந்த வரிசையில் கோலிவுட்டின் பெரும் பட்ஜெட் பொங்கல் ரிலீஸ் படங்களான ‘அயலான்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களின் தெலுங்கு பதிப்புகளும் சங்கராந்தி ரிலீஸ் படங்களாக அக்கட தேசத்தில் வெளியாவதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த இரண்டு படங்களின் ரிலீஸூம் தெலுங்கில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 


திரையரங்கம் ஒதுக்குவதில் சிக்கல்


இவற்றில் மகேஷ் பாபு நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகவிருக்கும் குண்டூர் காரம் திரைப்படத்தினை த்ரி விக்ரம் இயக்கியுள்ளார். ஸ்ரீலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்துள்ள நிலையில், தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தினை ஹைதராபாத்தின் நிஜாம் பகுதிகளில் தயாரிப்பாளர் தில் ராஜூ வெளியிடுகிறார்.


இந்நிலையில், பட டிஸ்ட்ரிப்யூஷன் பணிகளில் தில் ராஜூ திரையரங்குகள் ஒதுக்குவதில் கோளாறு செய்ததாகவும், ஹனுமன் படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த சில நாள்களாக தகவல்கள் பரவி வந்தன.


டோலிவுட்டில் ஃபிலிம் சேம்பர் தலைவராகவும் இருக்கும் தில் ராஜூ, முன்னதாக சங்கராந்தி ரிலீஸ் படங்களின் தயாரிப்பாளர்களுடன் இந்த பிரச்சனை குறித்து ஆலோசனையும் நடத்தியுள்ளார்.


ஹனுமன் பட தயாரிப்பாளருக்கு அழுத்தமா?


ஜனவரி 12ஆம் தேதி இந்த இரண்டு படங்களும் வெளியாகும் நிலையில், அன்றைய தேதியில் ஹனுமன் படத்துக்கு ஹைதராபாத்தில் 4 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற திரையரங்குகள் அனைத்தும் குண்டூர் காரம் படத்துக்கு ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், 14ஆம் தேதி ஹனுமன் படத்தை ரிலீஸ் செய்தால், கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்படும் என தில்ராஜூ கூறியதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், தில் ராஜூ ஹனுமன் பட தயாரிப்பாளருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக கடந்த சில நாள்களாக தகவல்கள் இணையதளங்களிலும் யூடியூப் சேனல்களிலும் வெளிவந்தன. இந்நிலையில் முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் தில் ராஜூ கடுமையான வார்த்தைகளால் இந்த செய்திகளுக்கு பதிலடி தந்துள்ளார்.


“இந்த இடத்தை அடைய எனக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. ஒவ்வொரு சங்கராந்திக்கும் நான் தான் இவர்களின் இலக்காக இருக்கிறேன். இது கடந்த 7-8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. தில் ராஜூ அனுபவம் வாய்ந்தவர் என்றும், விஷயங்களை எப்படிக் கையாள்வது என்பது அவருக்குத் தெரியும் என்றும் சிரஞ்சீவியே வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.


‘தோல உரிச்சிடுவேன்!’


 






ஆனால் சில இணையதளங்கள் தங்களின் நலன்களுக்காக தங்களுக்கு வசதியாக செய்திகளை மாற்றிக் கொண்டு விட்டன. தில் ராஜூ மென்மையானவர் என்று நினைக்கிறார்களா? தோல உரிச்சுடுவேன்” என்று கடும் வார்த்தைகளால் தில் ராஜூ பேசியுள்ளார்.


தில் ராஜூவின் இந்த கமெண்ட் டோலிவுட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தில் ராஜூ கேமராவை ஆஃப் செய்யும்படி கத்தும் வீடியோவும் வைரலாகி வருகிறது.