தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு படங்களை திரையரங்குகளில் திரையிடும் உரிமையையும் கைப்பற்றி ஏராளமான படங்களை வெளியிட்டும் வருகிறார். திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உடையவராக திகழும் தில் ராஜு சமீபத்தில் தமிழ் திரையுலகிலும் அடியெடுத்து வைத்த படம் தான் 'வாரிசு'. வசூலில் சாதனை படைத்து கெத்து காட்டியது விஜய் நடித்த வாரிசு திரைப்படம். இப்படத்தின் பிரமாண்டமான வெற்றிக்கு பிறகு மிகுந்த நம்பிக்கையோடு தில் ராஜு ரிலீஸ் செய்த திரைப்படம் 'சாகுந்தலம்'. 


 



சாகுந்தலம் படக்குழுவினர்


பிரமாண்டமாக உருவான புராணக்கதை :


குணசேகரன் இயக்கத்தில் நீலிமா தயாரித்த 'சாகுந்தலம்' திரைப்படத்தை உடன் இணைந்து தயாரித்து இருந்தார் தில் ராஜு. அது மட்டுமின்றி ஆந்திரா மாநிலம் முழுவதும் இப்படத்தை வெளியிடவும் செய்தார். புராணக்கதையை மையமாக வைத்து வெளியான சாகுந்தலம் திரைப்படத்தில் சமந்தா, தேவ் மோகன், அதிதி பாலன் மற்றும் பலர் நடித்து இருந்தனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலகெங்கிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. 3டி தொழில்நுட்பத்துடன் வெளியான இப்படம் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டது. சுமார் 65 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 7 கோடி மட்டுமே வசூல் செய்து 32 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.  


படுதோல்வி படம் :


சாகுந்தலம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படு தோல்வி படமாக அமைந்தது குறித்து மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார் தயாரிப்பாளர் தில் ராஜு. படம் வெளியாவதற்கு முன்னரே பிரபலமான ஓடிடி தளம் ஒன்றுக்கு 35 கோடிக்கு விற்கப்பட்டதால் இழப்பு 22 கோடியோடுபோனது. இல்லையேல் பெரும் நஷ்டத்தை சந்தித்து இருப்பேன் என புலம்பியுள்ளார். தனது 25 வருட சினிமா பயணத்தில் இது போன்ற ஒரு தோல்வியை சந்தித்தது இல்லை. 


தேவையில்லாத செலவு :


புராணக்கதையை பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் 3டியில் எடுத்து தேவையில்லாத செலவு செய்து விட்டார். இரண்டு மூன்று காட்சிகள் மட்டுமே படத்தில் 3டி காட்சிகள். அது தேவையில்லாத செலவு. ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்தி சீரியல் பார்த்தது போல இருந்தது என பல ரசிகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். சமந்தாவை தவிர வேறு எந்த கதாபாத்திரமும் நன்றாக இல்லை என ரசிகர்கள் கூறியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். சரியாக பிளான் செய்து ஸ்கெட்ச் போடும் தனக்கு இந்த படம் பெரும் சறுக்கலாக அமைந்து விட்டது என புலம்புகிறார் தில் ராஜு.