இசைநிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியும் உள்ளே வரமுடியாதவர்கள் தங்களது டிக்கெட் நகலை குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ரஹ்மான் டிவீட்:
இதுதொடர்பாக ஏ.ஆர். ரகுமான் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “அன்புள்ள சென்னை மக்களே, உங்களில் டிக்கெட் வாங்கியவர்கள் மற்றும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் நுழைய முடியாமல் போனவர்கள், தயவுசெய்து உங்கள் டிக்கெட் வாங்கியதன் நகலை உங்கள் குறைகளுடன் arr4chennai@btos.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பகிரவும். எங்கள் குழு விரைவில் பதிலளிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
டிக்கெட் வாங்கிய பலரும் நிகழ்ச்சியை காண அனுமதிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ரகுமான் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். அதேநேரம், நிகழ்ச்சியை காண முடியாதவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படுமா என்பது போன்ற தகவல்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. அதேநேரம், நிகழ்ச்சியில் பலர் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், வருத்தமோ அல்லது மன்ன்ப்பு என்ற எதையும் கூட அந்த பதிவில் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவிக்கவில்லை.
ரஹ்மான் இசைநிகழ்ச்சி:
கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அன்றைய தினம் பெய்த கனமழையால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால், சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு ஆறுதல் சொன்ன ரஹ்மான் வேறொரு நாளில் நிகழ்ச்சி நடைபெறும் என கூறி இருந்தார். அதன்படி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் இசைநிகழ்ச்சி நடைபெற்றது.
ஏமாறிய ரசிகர்கள்:
இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ACTC events நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சி நடைபெறும் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் ஓ.எம்.ஆர். சாலையை பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே மதியம் 2 மணியளவில் இருந்தே ரசிகர்கள் கார்களிலும், பைக்குகளிலும் வர தொடங்கியதால் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சாலையின் இருபுறம் நின்று சரிசெய்தாலும் பல மணி நேரமாக வாகன நெரிசல் ஏற்பட்டது. ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இருக்கைகளின் எண்ணிக்கையை காட்டிலும் கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு திரண்ட டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் ஏராளமானோர் நிகழ்ச்சியை காண முடியாமல் திரும்பினர். கூட்ட நெரிசலில் சிக்கி கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். இது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானதோடு, கடும் கண்டனங்களும் குவிய தொடங்கியது. இந்த குளறுபடிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான ACTC events வருத்தமும் தெரிவித்துள்ளது.