சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடன் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அமரன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். ருக்மினி வசந்த் , வித்யுத் ஜம்வால் , விக்ராந்த் , பிஜூ மேனன் , ஷபீர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். அமரன் திரைப்படத்தின் வசூல் வெற்றி சிவகார்த்திகேயனை கோலிவுட்டின் முன்னணி நடிகர் அந்தஸ்த்தை பெற்று தந்தது. இதனால் மதராஸி படத்தின் வசூல் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மதராஸி படத்தின் முதல் நாள் வசூல் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமரன் படத்தின் முதல் நாள் வசூலை மதராஸி படம் முந்தியதா என்பதைப் பார்க்கலாம்
அமரன் முதல் நாள் வசூல்
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான அமரன் திரைப்படம் ரூ 120 கோடி பட்ஜெட்டில் உருவாகியது. உலகளவில் 3200 திரைகளில் இப்படம் வெளியானது. முதல் நாளில் அமரன் திரைப்படம் உலகளவில் ரூ 42.3 கோடி வசூல் செய்தது. இந்தியாவில் மட்டும் ரூ 21.25 கோடி வசூலித்தது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ 15 முதல் 17 கோடி அமரன் திரைப்படம் முதல் நாளில் வசூலித்தது. 2024 ஆம் ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் 4 ஆவது இடத்தை பிடித்தது அமரன் படம். ஒட்டுமொத்தமாக அமரன் இந்தியளவில் ரூ 259.52 கோடியும் பிற நாடுகளில் ரூ 82 கோடி சேர்த்து மொத்தம் ரூ 341.52 கோடி வசூல் செய்து சிவகார்த்திகேயனின் கரியரில் அதிக வசூல் ஈட்டிய படமாக உள்ளது.
அமரன் வசூலை முந்தியதா மதராஸி?
மதராஸி திரைப்படம் வெளியாவதற்கு முன் மிக குறைவான ப்ரோமோஷனே படக்குழு செய்தது. அமெரிக்கா , ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் படம் வெளியானாலும் எத்தனை திரையரங்குகள் என்பது பற்றி தகவல்கள் வெளியாகவில்லை. அமரன் படத்தைக் காட்டிலும் மதராஸி திரைப்படம் குறைவான திரையரங்குகளில் வெளியாகி உள்ளது மதராஸி. முதல் நாளில் மதராஸி திரைப்படம் ரூ 13 கோடி இந்தியாவில் வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு இதுவரை வெளியிடவில்லை . மேலும் உலகளவில் மதராஸி படத்தின் வசூல் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை. படத்திற்கு ரசிகர்களும் விமர்சகர்களும் பாசிட்டிவான கருத்துக்களையே சொல்லியிருக்கிறார். இதனால் அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு மக்களிடம் பெரியளவில் வரவேற்பும் வசூல் பெருகும் என எதிர்பார்க்கலாம்