கூலி


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா , உபேந்திரா , சத்யராஜ் , செளபின் சஹீர் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பை கையாள்கிறார்கள். கூலி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாள் முன்பாக சென்னையில் தொடங்கியது.


கூலி படத்தின் கதையில் மாற்றம் 


கூலி படம் குறித்து முன்னதாக லோகேஷ் கனகராஜ் இப்படி தெரிவித்திருந்தார். " நான் என்னுடைய நண்பர் ஒருவரை வைத்து எடுக்க நினைத்திருந்த படம் இது. இந்த ஐடியாவை ரஜினியிடம் சொன்னேன் அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது கதை கேட்டது என்னை அவர் கட்டிபிடித்து பாராட்டினார். இந்த கதை எனக்குமே எடுப்பதற்கு சவாலானது தான் இந்த மாதிரியான ஒரு படத்தை நானும் இதுவரை இயக்கியதில்லை. இப்படத்தின் சில காட்சிகளை ஐமேக்ஸ் கேமராவில் எடுக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். ரஜினியின் கதாபாத்திரம் நல்லவன் கெட்டவன் என்று இல்லாமல் கிரே ஷேடில் இருக்கக்கூடிய ஒரு கதாபாத்திரம்" என அவர் தெரிவித்திருந்தார்.


ஆனால் தற்போது எடுக்கப்படும் கூலி படத்தின் கதை வேற என்றும் லோகேஷ் ரஜினியிடம் சொன்ன கதை வேற என்று லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. " லோகேஷ் கனகராஜ் ஐமேக்ஸ் கேமராவில் எடுப்பதாக சொன்ன கதை வேற ஒரு கதை. அந்த கதைக்கும் நிறைய காலம் தேவைப்பட்டது. அந்த கதை பேசும்போது நானும் இருந்தேன். ஐமேக்ஸ் கேமராவில் அந்த கதையை பண்ண வேண்டும் என்று லோகேஷ் விருப்பப்ட்டார். அந்த கதை ஹாலிவுட் படத்திற்கே சவால்விடும் ஒரு கதை. எப்படி லோகேஷ் அப்படி ஒரு கதையை யோசித்தார் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அந்த படத்திற்கு இந்தியா முழுவதில் இருந்தும் நடிகர்கள் தேவைப்பட்டார்கள். ஆனால் இங்கு தயாரிப்பு நிறுவனம் 6 மாதத்தில் ரிலீஸ் கேட்டார்கள். அதனால் அவர் கதையை விட்டு வேற ஒரு கதையை எடுக்க முடிவு செய்தார். எதிர்காலத்தில் வேண்டுமானால் அவர் அந்த படத்தை இயக்க வாய்ப்பிருக்கிறது." என்று மனோஜ் தெரிவித்துள்ளார்.