சிபாரிசு இல்லாமல் சினிமாவிற்கு வந்தவரா அஜித் குமார் ?
நடிகர் அஜித் குமார் திரையுலகிற்கு வந்து 33 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்த நாளை முன்னிட்டு அஜித் குமார் பொது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதில் அவர் ரசிகர்களை தனது சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ள மாட்டேன் என அஜித் குறிப்பிட்டிருந்தது பரவலாக பேசுபொருளானது. நடிகர் விஜயை குறிப்பிட்டு அஜித் அப்படி கூறினாரா என சமூக வலைதளங்களில் விவாதம் தொடங்கியுள்ளது. இதே அறிக்கையில் அஜித் குறிப்பிட்டுள்ள மற்றொரு கருத்து தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது
"இந்தப் பயணம் எனக்கு எளிதாக இல்லை. இந்தத் துறைக்கு எந்தப் பின்புலமோ அல்லது யாருடைய சிபாரிசோ இல்லாமல்தான் நுழைந்தேன். முழுக்க முழுக்க என் சுய முயற்சியால் மட்டுமே சினிமாத் துறைக்குள் நுழைந்தேன். காயங்கள், மீண்டு வருதல், தோல்வி மற்றும் அமைதி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்தது. ஆனால், நான் தளர்ந்து போகவில்லை. முயற்சி செய்தேன், மீண்டு வந்தேன், தொடர்ந்து முன்னேறுகிறேன்!ஏனெனில், விடாமுயற்சி என்பதை வெறுமனே நான் கற்றுக் கொள்ளவில்லை. அதை பரிசோதித்து அவ்வண்ணமே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்." என அஜித் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எந்த வித சிபாரிசும் இல்லாமல் தான் அஜித் குமார் வந்தாரா என தற்போது நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து வலைபேச்சு யூடியூப் சேனலில் பிஸ்மி இப்படி கூறியுள்ளார்
அஜித்திற்கு சிபாரிசு செய்த எஸ்.பி பாலசுப்ரமணியம்
பிஸ்மி பேசுகையில் " அஜித்தின் அறிக்கையில் சுய பெருமை அதிகமாக இருந்தது. அஜித் தெலுங்கில் அறிமுகமான பிரேம புஸ்தகம் படத்தில் எஸ்.பி.பி தான் தன்னை சிபாரிசு செய்ததாக பல பேட்டிகளில் அஜித் சொல்லியிருக்கிறார். அதேபோல் தமிழில் அஜித்தின் முதல் படம் அமராவதி. இந்த படத்திற்கு இயக்குநர் வேறு ஒரு நடிகரை பார்த்து வைத்திருந்தார். எஸ்.பி.பி தான் தனக்கு ஒரு பையனை தெரியும் என அஜித்தை சிபாரிசு செய்து இந்த படத்தில் அவரை நடிக்க வைக்க அழுத்தம் கொடுத்துள்ளார். வசந்த் இயக்கிய ஆசை படத்தில் எஸ்.பி. பி மகன் சரண் நடிக்க இருந்தது. ஆனால் அவருக்கு அப்போது தான் திருமணமானதால் இந்த படத்திலும் அஜித்தை நடிக்க வைத்த எஸ்.பி.பி சிபாரிசு செய்துள்ளார். இந்த உண்மைகளை எல்லாம் தவிர்த்து அஜித் தன்னுடைய வளர்ச்சிக்கு தான் மட்டுமே காரணம் என பேசியுள்ளது சுய பெருமை பேசுவதாக இருக்கிறது" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.