நடிகர் துருவ் விக்ரம் மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் காதல் உறவில் இருந்ததாக அண்மை காலங்களில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. இருவரும் இணைந்து நடித்த 'பைசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு காலத்தில் நெருக்கமாக பழகியதாகவும், பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக தோன்றியதாலும் காதல் வதந்திகள் வேகமெடுத்தன. இருவரும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், தற்போது அவர்கள் பிரிந்துவிட்டதாக புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகும் அனுபமாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
இந்த பரபரப்புக்கு காரணம் அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு. பல புகைப்படங்களை பகிர்ந்த அவர், "இனி யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. பாடலை யாராவது தேர்வு செய்ய வேண்டிய அவசியமில்லை. வேறு யாருடைய கேப்ஷனும் தேவையில்லை. இப்போது பதிவிடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்ற பொருளில் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை சுட்டிக்காட்டுவதாக ரசிகர்கள் கருதி, சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கத் தொடங்கினர்.
துருவ் விக்ரமை அன்ஃபாலோ
அதுமட்டுமல்லாமல், அனுபமா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் துருவ் விக்ரமை 'அன்ஃபாலோ' செய்திருப்பதாகவும், அதுவே பிரேக்-அப் வதந்திக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். சில ரசிகர்கள் அனுபமாவின் சகோதரரும் துருவை பின்தொடர்வதை நிறுத்தியிருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், இவை அனைத்தும் ரசிகர்களின் கவனிப்புகள் மட்டுமே.
துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் காதலித்து வருவதாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் பல செய்திகள் வெளியாகின. விருது வழங்கும் விழாக்களில் இருவரும் ஒன்றாக தோன்றியது, துருவ் பகிர்ந்த செல்ஃபியை அனுபமா இதய எமோஜியுடன் மறுபகிர்வு செய்தது உள்ளிட்ட சம்பவங்கள் காதல் வதந்தியை மேலும் வலுப்படுத்தின. ஆனால் அந்த நேரத்திலும் இருவரும் தங்களது உறவு குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
தற்போது வெளியாகியுள்ள பிரேக்-அப் தகவலும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத ஒன்றாகவே உள்ளது. அனுபமாவின் பதிவு மற்றும் சமூக வலைதள நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த தகவல்கள் பரவி வருகின்றன. துருவ் விக்ரம் அல்லது அனுபமா பரமேஸ்வரன் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் மட்டும் இந்த விவகாரத்தை தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.
