ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகளை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தீவிரமாக தொடங்கியுள்ளது. நேற்று படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், இன்று அதன் ஃபர்ஸ்ட் லுக் உருவாக்கப்பட்ட விதத்தை காட்டும் மேக்கிங் வீடியோவும், புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்தடுத்த அப்டேட்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை படக்குழு தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
‘தலைவர் 173’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்திற்கு தற்போது ‘தர்மன்’ என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “தர்மமே வெல்லும்” என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரஜினிகாந்த் மருத்துவர் உடையில், அறுவை சிகிச்சை அறையை பின்னணியாகக் கொண்டு மிகவும் தீவிரமான தோற்றத்தில் காணப்பட்டார். “The Deadly Doctor” என்ற டேக் லைனும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு, மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றுகிறார். ஒளிப்பதிவை நிகேத் பொம்மி மேற்கொள்கிறார். படத்தொகுப்பை பிரதீப் இ. ராகவ் கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளுக்கு தேசிய விருது பெற்ற அன்பறிவ் இரட்டையர்கள் பணியாற்றுகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. பூஜை நிகழ்ச்சிக்குப் பிறகு இன்று முதல் முக்கிய கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை பூந்தமல்லி பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அங்கு முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. பொங்கல் 2027 வெளியீட்டை இலக்காக வைத்து படக்குழு பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் இன்று வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தில் செம ஸ்டைலாக தோற்றமளிக்கிறார். தலைப்பு அறிவிப்பு வெளியான மறுநாளே புதிய போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ள ராஜ்கமல் நிறுவனம், ‘தர்மன்’ திரைப்படத்திற்கான புரமோஷன் பணிகளை ஆரம்ப கட்டத்திலேயே தீவிரப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
